இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளார் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

Friday, October 20th, 2023

ஊழல் ஒழிப்பு சட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பை அரசியலமைப்பு பேரவை தவறிவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்மகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய நீதி அமைச்சர், – “ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பதவி உயர்வு மற்றும் இலஞ்சத்தை பெற்றுள்ள இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஒருவர் குறித்த சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபைக்கு கடிதம் எழுதி, சபையின் பத்து உறுப்பினர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எவ்வாறு அரசியலமைப்பு சபையை அச்சுறுத்த முடியும்?. அரசியலமைப்பு சபையை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அரசியலமைப்புச் சபை உருவாக அடித்தளமிட்டது நானே.

இலஞ்ச-ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. குறித்த சட்டம் கடந்த மாதம் 15 ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்காலிகமாகவே பதவி வகிக்க முடியும்.

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் தமக்கு நியமனங்களை வழங்க அதிகாரங்கள் உள்ளதாக கூறுகின்றனர். அவ்வாறு எவ்வித அதிகாரங்களும் இல்லை.

21ஆவது திருத்தச்சட்டம் கடந்த ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் இவற்றுக்கான நியமனங்களை வழங்கும் அதிகாரம் அரசியலமைப்பு சபைக்கே உள்ளது.

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்துக்கு எதிராக செயல்படும் நோக்கில் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் இலஞ்சம் பெற்றுள்ளனர்‘‘ என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: