இலங்கை மீனவர்களின் கைது நியாயமற்றது!

Sunday, April 9th, 2017

‘கவீஷ புதா’ என்ற மீன்பிடிப் படகிலிருந்த ஏழு இலங்கை மீனவர்களும் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை நியாயமற்றது என்பதனால் அவர்களை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை அரசு, இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

‘கவீஷ புதா’ மீன்பிடிப் படகிலிருந்த இலங்கை மீனவர்கள் ஏழு பேரும் இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்கவில்லை. அவர்கள் வெகு தொலைவில் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டுவிட்டு இலங்கை திரும்பும் வரும் வழியிலேயே இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்றும் அமைச்சர் அமரவீர இந்திய உயர்ஸ்தானிகருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இந்திய கடல் எல்லைக்குள் இந்த மீனவர்கள் அத்துமீறாத நிலையில் அவர்களை கைது செய்திருப்பது நியாயமற்றது என சுட்டிக்காட்டிய அமைச்சர், அவர்களை உடன் விடுதலை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை மீனவர்கள் பயணம் செய்த ‘கவீஷ புதா’ எனும் மீன்பிடிப் படகு பயணம் செய்த கடல் வழிப்பாதை வி.எம்.எஸ் தொழில்நுட்பத்தின் மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவுக்கு கீழே இந்த தரவுகள் மற்றும் வரைப்படங்களை இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கூடாக இந்திய அரசாங்கத்துக்கு வழங்குவதற்கும் அமைச்சர் அமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை, இந்திய கரையோர காவற்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: