இலங்கை மீதான தீர்மானம் நிராகரிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – ஐநா சபை உறுப்பு நாடுகளுக்கு இலங்கை அழைப்பு!

Thursday, February 25th, 2021

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

அத்தோடு, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் நடத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன எனவும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கடந்த 22 ஆம் திகதிமுதல் இடம்பெற்று வருகிறது.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதுடன், குறித்த அறிக்கையை நேற்றுஇரவு இடம்பெற்ற அமர்வில் சமர்ப்பித்திருந்தார்.

இதனையடுத்து, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ தொடர்பான அறிக்கை மீதான ஊடாடும் உரையாடலில், காணொளி மூலம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, குறித்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் உரிய நீதிமன்றத்தினால் அல்லது வேறு பொறிமுறையினூடாக உறுதிப்படுத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி சிலரை இலக்கு வைத்து தடை விதிப்பதற்கும், பயணத் தடை விதிப்பதற்கும் யோசனை முன்வைத்துள்ளமை இறைமையுள்ள நாடொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நிகழ்ச்சி நிரல் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையின் அமைதி காக்கும் படையின் செயற்பாடுகளை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கும் யோசனையை நிராகரித்துள்ள அவர், தொழில் ரீதியாக செயற்படும் இறைமையுள்ள ஒரு நாட்டின் இராணுவம் மீது சுமத்தப்படும் அழுத்தம், ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை மீறுவதாகவும் இருக்கின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக நீதிமன்றத்தின் கட்டுப்பாடு மற்றும் சமநிலைக்கு அழுத்தம் ஏற்படுவதாக மிச்சேல் பச்சலட் தனது அறிக்கையில் சுமத்தும் குற்றச்சாட்டையும் இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேறு நாடுகளின் அழுத்தம் காரணமாக இலங்கை போன்ற ஒரு தனி நாட்டை, எவ்வித சாட்சியங்களும் இன்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி மிகவும் அபாயகரமானது என்பதால் இது குறித்து ஏனைய நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்திய வெளிவிவகார அமைச்சர் இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்ட எந்தவொரு தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும் என இலங்கை இந்த சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: