இலங்கை – சுவிஸ்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கைச்சாத்து!

Wednesday, July 27th, 2016

இலங்கையில் பணிபுரியும் கப்பற் பணியாளர்களிற்கு சுவிஸ்லாந்தில் பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், வணிக கப்பற்றுறை செயலகத்தில் அத்தியட்சகர் அஜித் செனவிரத்ன மற்றும் இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் ஹெயின்ஸ் வோக்கர் நெய்டர்கோன் ஆகியோருக்கிடையே துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் கண்காணிப்பின் கீழ் கைச்சாத்திடப்பட்டது.

இதேவேளை எதிர்காலத்தில் இலங்கை கப்பற் பணியாளர்கள் சுவிஸ்லாந்து நாட்டு தேசிய கொடியின் கீழ் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி தெரிவித்துள்ளார்.

குறித்தவிடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வணிக கப்பற்றுறை செயலகத்தின் தலைவர் அஜித் செனவிரத்ன –

எமதுநாட்டு கப்பற் பணியாளர்களும் பிறிதொரு நாட்டு கப்பலில் பணியாற்றுவதற்கு இந்நாட்டில் வழங்கப்படுகின்ற சமுத்திரவியல் சான்றிதழ் மாத்திரம் போதுமானதல்ல எனவும் குறித்த கப்பல் எந்த நாட்டிற்கு சொந்தமானது என்பதனை அறிந்துகொள்ளும் சான்றிதழையும் பெற்றுக்கொள்வது அவசியம் என குறிப்பிட்டார். அத்துடன் குறித்த சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு அந்தந்த நாடுகளின் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தினார்.

இது மிகவும் அத்தியாவசியமான காரணியாகும் என குறிப்பிட்ட அவர், தற்போது இலங்கை இவ்வாறான 29 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை எதிர்வரும் காலத்தில் சுவிஸ்லாந்து நாட்டு கொடியுள்ள கப்பல்களில் பணியாற்றுவதன் மூலமாக வெளிநாட்டு வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிடைக்குமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது

Related posts: