இலங்கை ஒருமித்த  நாடாக இருக்க வேண்டும்- சொல்கிறது அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் பரிந்துரை!

Friday, September 22nd, 2017

மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டு, சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஒருமித்த (ஐக்கிய) நாடாக இலங்கை இருக்க வேண்டும் என அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு பரிந்துரைத்துள்ளது.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி அரசியலமைப்பு சபை ஏகமனதாக ஸ்தாபிக்கப்பட்டது.

21 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குகின்றார்.

இந்தக் குழுவில் அமைச்சர்களான, நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், லக்ஷ்மன் கிரியெல்ல, ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, டி.எம்.சுவாமிநாதன், மனோ கணேசன், மலிக் சமரவிக்கிரம, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், தினேஸ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, அனுரகுமார திசாநாயக்க, விஜயதாச ராஜபக்ஸ, பிமல் ரத்நாயக்க, எம்.ஏ.சுமந்திரன், பிரசன்ன ரணதுங்க, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, டொக்டர் துசித்தா விஜேமான்ன ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கை மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டுள்ள, சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஒருமித்த நாடாக இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராட்சியம் அல்லது ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு எனும் பொருளுடையதாகும் எனவும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதிகாரப்பகிர்வு கோட்பாடுகள் தொடர்பிலும் இடைக்கால அறிக்கையில் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதிகாரப் பகிர்வின் முதல்நிலை அலகாக மாகாணங்கள் இருக்க வேண்டும் என்ற முன்மொழிவை வழிநடத்தல் குழு ஏற்றுக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரயிலமைப்பின் பிரகாரம் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் அதேபோன்று பிரதான ஆட்புலத்தின் புவியியல் பரப்பு ஆகியவற்றை அடையாளம் காண வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாகாணங்களை இணைத்தல் தொடர்பிலான ஏற்பாடுகளுக்கு வழிப்படுத்தும் குழுவின் மேலதிக பரிசீலனை தேவைப்படுவதாக அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயத்தில் மூன்று தெரிவுகள் யோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய,

  1. இரண்டு அல்லது அதிகமான மாகாணங்கள் தனி அலகை உருவாக்கும் சாத்தியப்பாடு தொடர்பாக அரசியலமைப்பின் தற்போதுள்ள ஏற்பாடுகள் (உறுப்புரை 154அ(3)) உரிய மாகாணங்களின் மக்கள் தீர்ப்பொன்றும் அவசியப்படும் என்ற மேலதிக தேவையுடன் வைத்திருக்கும் யோசனையை வழிப்படுத்தும் குழு கவனத்திற் கொண்டுள்ளது.
  2. மாகாணங்களின் இணைப்பிற்கு அரசியலமைப்பு ஏற்பாடு செய்தலாகாது என்பது இரண்டாவது தெரிவாகும்.

03 வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனியொரு மாகாணமாக புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கும் என்ற தெரிவும் யோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு மாகாண சபை அல்லது ஏனைய அதிகார சபை இலங்கையின் ஆட்புலத்தின் எந்தவொரு பகுதியையும் தனி நாடொன்றாகப் பிரகடனப்படுத்தவோ அல்லது எந்தவொரு மாகாணத்தையோ அல்லது அதன் பகுதியையோ இலங்கையிலிருந்து பிரித்துத் தனியாக்குவதற்காக ஆதரித்து வாதிடவோ அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது என அரசியல் அமைப்பில் குறிப்பிட்டுக் கூறுதல் வேண்டும் எனவும் அதில் பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியை பாராளுமன்றம் ஊடாக தெரிவு செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரைத் தெரிவு செய்வதற்கான மூன்று முறைமைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. வாக்கெடுப்பின் மூலம் நேரடியாகத் தெரிவு செய்தல், ஏற்கனவே பெயரிட்டு தெரிவு செய்தல் மற்றும் வெஸ்ட் மின்ஸ்டர் நடைமுறையைப் பின்பற்றுதல் ஆகியன வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts:

இலங்கையின் நிலை மோசமாகலாம் – எச்சரிக்கை விடும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்!
சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பயனாளிகள் அடை...
பிரதேச சபை எல்லைகளிலுள்ள நகரப் பிரதேசங்களை அடையாளங் காணும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக...

பொன்.சிவகுமாரனின் சிலையை நிறுவ எதிர்கொண்ட நெருக்கடிகளை வரலாறு பதிவு செய்துள்ளது - ஈ.பி.டி.பியின் யாழ...
அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை – கிளிநொச்சியில் வீதி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கை நடைமுறையில்!
இலங்கையின் கட்டடக்கலை அடைந்த தரம் மற்றும் சிறப்பை மீட்டெடுக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...