இலங்கை இன்று மறுமலர்ச்சி பாதைக்கு பிரவேசித்துள்ளது – அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற ஜனாதிபதி ரணில் அழைப்பு!

Thursday, April 27th, 2023

இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் உருவாகி வருவதாகவும் அதனை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்தாண்டு ஜூலை மாதத்தில் நாட்டில் காணப்பட்ட கலவரம், தீ வைப்பு, அரச வங்குரோத்து நிலைமை போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை 8 மாதங்களில் மாற்றியமைத்து வெற்றிகரமாக மாற்ற முடிந்ததாகவும் அது ‘Sri Lanka Come Back Story’ என அழைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரை நிகழ்த்தினார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது –

“இலங்கையில் உள்நாட்டு கடனை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் முன்மொழிந்துள்ளனர். எனினும், அரசாங்கம் அது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை. எவ்வாறெனினும், வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் போது, இலங்கை அதன் உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் முடிவெடுக்கும்” என்றார்.

சிலர் தெரிவித்து வருவது போல் உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதால் உள்ளூர் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகளில் எந்த நெருக்கடியும் ஏற்படாது என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அத்துடன் ஊழியர் சேமலாப நிதி உறுப்பினர்களுக்கும் எந்த அநீதியும் ஏற்படாது.

அதனை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார். கடந்த வருடம் ஜூலை மாதத்தில் நாட்டில் நிலவிய அமைதியின்மை, தீ வைப்பு, வங்குரோத்து நிலை போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை 8 மாதங்களில் வெற்றிகரமாக மாற்ற முடிந்துள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் – சர்வதேச நாணய நிதியத்துடன் 16 தடவைகள் உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும், அந்த உடன்படிக்கைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையால் தோல்வியடைந்தன. அதற்கிணங்க சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை தவிர, வேறு மாற்றுவழி நாட்டில் காணப்படாத நிலையிலேயே தற்போதைய பலவீனங்களை ஒருபுறம் வைத்துவிட்டு புதிய நோக்குடன் 17 ஆவது தடவையாக இணைய நேர்ந்தது.

தேசிய கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அத்துடன், தற்போது நாட்டில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் பாதுகாப்பிற்கான சமூக பாதுகாப்பு வலையமைப்பை முன்னெடுக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எமது வரிகள் குறைக்கப்பட்டதன் மூலம் மொத்த தேசிய உற்பத்தியில் 4 வீதத்தை நாடு இழக்க நேரிட்டது. அதன் பின்னர் கொவிட் பெருந்தொற்று காரணமாக எமது பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்குள் விழ நேர்ந்தது.

அத்தகைய நிலையிலேயே அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் ரூபாவின் பெறுமதி 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மூன்று மாதங்களில் 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

அதன் பின்னர் ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி கண்டது. 2022ஆம் ஆண்டை முழுமையாக நோக்கும் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. அத்தோடு, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்தில் பணவீக்கம் 70 வீதமாக அதிகரித்தது. உணவுக்கான பணவீக்கம் 95 வீதமாக அமைந்தது.

இவ்வாறான நிலையிலேயே ஜூலை மாதத்தில் நான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். மக்கள் பெரும் கஷ்டத்தில் வாழ்ந்த நம்பிக்கையற்ற நிலையில் இருந்த சந்தர்ப்பத்தில், நாட்டை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

மேலும் சீனாவுடன் தனியாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம். அதற்கமைய பரிஸ் கிளப் மற்றும் இந்தியாவுடன் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். மறுபுறம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். இதன் பின்னர் தனியாருடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இந்த இணக்கப்பாட்டினால் 03 பில்லியன் டொலர்கள் அடுத்த நான்கு வருடங்களில் எமக்கு கிடைக்கும். இதனைத் தவிர ஏனைய நிறுவனங்களை நோக்கும்போது அவற்றின் மூலம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நாட்டுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தவிர எமக்கு வேறு எந்த மாற்றுவழியும் இல்லை. மாற்றுவழிகள் எதுவும் முன்மொழியப்படவும் இல்லை. வேறு மாற்றுவழி இல்லாவிட்டால் இதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து இதனை அங்கீகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன். ஜ.எம்.எப். 06 மாதத்திற்கு ஒரு தடவையே எமது நாட்டுக்கு வருகிறது. குறைபாடுகள் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கலாம்.

தேசிய பேரவை போன்று பல குழுக்கள் உள்ளன. முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்ற வேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும். இது தொடர்பில் பல கருத்துகள் இருக்கலாம். எனினும், அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பல்வேறு கருத்துக்கள் உள்ள போதும் அனைவரும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

2048ஆம் ஆண்டாகும் போது நாம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இன்றேல் நாம் இளைஞர்களை காட்டிக் கொடுத்தவர்களாக ஆகியிருப்போம். அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கியதாக ஆகிவிடும் இளைஞர்கள் குறித்து சிந்திக்க வேண்டும். அதிகார மையம் பற்றி மாத்திரம் சிந்திக்கக் கூடாது. இதனை நாம் முன்னெடுக்கத் தவறினால் ஓரிரு ஆண்டுகளில் எங்கள் எவருக்கும் வாழமுடியாத நிலை ஏற்படும். எனவே அனைவரும் இணைய வேண்டும். 2048 ஆம் ஆண்டு வரையான கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதில் முதல் 05 வருடங்களுக்கான திட்டத்தை செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உலங்கு வானூர்தி மூலம் தொற்று நீக்கி கிருமிநாசினி விசிறல் போலியான தகவல்கள் - விமானப்படை அறிவிப்பு!
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு – வழிமுறைகளை இறுக்கமாக அனுசரிக்குமாறு பொதும...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் தொடர்பில் 12,373 முறைப்பாடுகள் பதிவு - இலங்கை கணின...