இலங்கை அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள இடைவெளியே தற்போதைய தேர்தல் இழுபறி நிலைமைக்கு காரணம் – வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா சுட்டிக்காட்டு!

Monday, April 27th, 2020

இலங்கை அரசியலமைப்பு சட்டத்திலும், இலங்கை தேர்தல் சட்டத்திலும் உள்ள இடைவெளியே இன்று தேர்தல் நடைபெறுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகரும் வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சி.தவராச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கொரோனா தொற்று இலங்கையில் பரவுவதை தடுக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தால் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதிமுதல் நாடு முழுமையாக முடக்கப்பட்டது. இதன் காரணமாக ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தேர்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தனது அதிகாரங்களைக் கொண்டு சுகாதாரத்தரப்பு மற்றும் பாதுகாப்பு தரப்பினரது முழுமையான ஒத்துழைப்புடன் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகின்றார்.

அத்துடன் சுகாதார தரப்பு மற்றும் பௌதீக வளங்களின் வளர்ச்சி போதுமானதாக இல்லாது போனாலும் அரசியல் தலைமையின் சரியான செயற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களால் இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்றை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்திருக்கின்றது.

இந்நிலையில் அரசியல் நோக்கங்களுக்காக பல்வேறு வகையில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ஏதேனும் ஒரு அவசர தேவையின் நிமிர்த்தம் அவசியம் ஏற்படும் பட்சத்தில் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தை மீறி உயர் நீதிமன்றின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு வழிவகை உண்டு.

அத்துடன் சட்டவாக்கங்கள் எல்லாம் மனிதரால் தேவைகள் கருதியதாகவே உருவாக்கப்பட்டது. அது எந்த நேரத்திலும் மீண்டும் ஒரு நன்மை கருதிய தேவைக்காக உச்ச நீதிமன்றின் ஆலோசனையுடன் மாற்றம்பெறுவது உண்டு.

அத்துடன் கடந்த நல்லாட்சி அரசு கலைக்கப்பட்டது அந்த அரசின் ஆளுமையற்றதும் அவர்களது இயலாமையுமே காரணம். உதாரணமாக 2019 ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் அசமந்தமாக இருந்தது மட்டுமல்லாது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதன் பின்னரும் அதை எதிர்கொண்ட விதமும் முழு நாட்டையும் முகம்சுழிக்க வைத்தது. அந்தவகையில்தான் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபின் தனக்குள்ள அதிகாரத்தை கொண்டு நாடாளுமன்றை கலைத்திருந்தார். இது ஒரு ஜனநாயக மீறல் கிடையாது. அந்தவகையில் கடந்த நாடாளுமன்றை மீண்டும் கூட்டுவது வீண் விரயமானதாகவே அமையும்.

அதுமட்டுமல்லாது நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் வரை ஜனாதிபதிக்கு பொது சேவைக்கான நிதியை வழங்க அதிகாரம் உள்ளது. அத்துடன் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட்டும் 3 மாதங்கள்வரை ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் உள்ளது.

மேலும் ஊரடங்கு சட்டம் போடப்பட்டது மக்களின் பாதுகாப்புக்கும் நாட்டின் நலன்களுக்காகவும் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் பொறுப்புள்ள பிரஜைகளாக வாழவேண்டும். பொறுப்புள்ள கருத்துக்களை வெளியிட வேண்டும்.

சட்டம் அல்லாத சம்பிரதாயம் நடைமுறைகளை இத்தகைய அனர்த்தங்களின் போது நடைமுறைப்படுத்த முடியும். இதை உயர் நீதிமன்று தீர்மானிக்கும். ஆனால் சட்டம் நீதி என்று கூறி தனிப்பட்ட ஆழுமைகளை இந்த காலகட்டங்களில் காட்டுவதும் உகந்ததல்ல எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts: