இலங்கையில் 100 அண்மிக்கும் கொரோனா மரணங்கள் – தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 21 நெருங்குகின்றது – சுகாதார அமைச்சு தகவல்!

Wednesday, November 25th, 2020

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் மொத்த மரணங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் மொத்தமாக 459 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையானது 20,967 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட 459 கொரோனா நோயாளர்களுள் 458 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் சிக்கியவர்கள் என்றும் ஒருவர் கட்டுநாயக்கவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த துருக்கிய ஏயர்லைன்ஸ் விமான உதவியாளர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்யைதினம் கொரோனா தொற்றுக்குள்ளான 465 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதனால் குணமடைந்த மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையும் 14,962 ஆக உயர்வடைந்தது.

தற்போது நாடு முழுவதும் உள்ள 56 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் 5,911 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 601 நபர்கள் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக நேற்றிரவு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்டது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 94 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: