இலங்கையில் கழிவுப்பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்குமாறு கோரி மனு தாக்கல்!

Tuesday, July 23rd, 2019

இலங்கைக்கு, வெளிநாடுகளில் இருந்து கழிவுப்பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து கட்டளை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சூழலியல் அமைப்பொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், சுங்கப் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பாரிய அளவான குப்பை கூளங்கள் இலங்கையில் தேக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பு துறைமுகத்தில் இருந்து குறித்த குப்பைகூளங்கள் அடங்கிய கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவை ஹேலிஸ் சீசோன் நிறுவனத்தின் ஊடாக, இலங்கை முதலீட்டு சபையின் அனுமதியுடன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஹேலிஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

இதுதொடர்பில் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய ஹேலிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அசங்க ரத்நாயக்க, தற்போது தடுப்பில் உள்ள 102 கழிவு கொள்கலன்களுக்கும் தங்களுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்.

இதற்கிடையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் அடங்கிய 241 கொள்கலன்கள் இங்கிலாந்திலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் மேலதிக சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். குறித்த கழிவு கொள்கலன்களில் 111 கொள்கலன்கள் தற்போதும் கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் 130 கொள்கலன்கள் இதுவரையில் கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: