இலங்கையில் உருவாக்கப்படுகின்றது டிஜிட்டல் மாற்ற முகவர் நிறுவனம் – தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கியூபாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, September 16th, 2023

உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெறும் ஜி77 மற்றும் சீன அரச தலைவர் மாநாட்டில் நேற்றைய தினம் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுநோய்கள், காலநிலை மாற்றங்கள், உணவு, உரம் மற்றும் வலுசக்தி நெருக்கடிகள் போன்றவை, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தடைகளை ஏற்படுத்துகின்றன.

அதேபோன்று, அந்த நிலைமையை, உலகளாவிய கடன் நெருக்கடி மேலும், அதிகரிக்கச் செய்வதுடன், அதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் நிலை, உலகளாவிய ரீதியில் தெற்கில் உள்ள நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதிக செலவு காரணமாக சில தொழில்நுட்ப முறைகளுக்கு பிரவேசிப்பதற்குள்ள வரையறைகள், போதுமான டிஜிட்டல் திறன்கள், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, கலாசார மற்றும் நிறுவன ரீதியில் நிலவும் தடைகள், நிதி தொடர்பான தடைகள் போன்ற சவாலான சூழ்நிலைகள் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் இந்தப் புதிய தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்துள்ளது.

அந்த இடைவெளியைக் நிரப்புவதற்காக, டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, உயிரியல் தொழில்நுட்பவியல் மற்றும் மரபணு வரிசைமுறை போன்ற புதிய தொழில்நுட்பங்களை நோக்கி விரைவாக செல்ல வேண்டியது அவசியமாகும்.

அபிவிருத்திப் பொறிமுறைகளைப் பின்பற்றுவதற்கான செயல்முறையை இலகுபடுத்துவதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கும், அந்தச் செயல்முறைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு, அதற்குத் தேவையான அறிவு மற்றும் முழுமையான தொழில்நுட்பத்துடன், கல்வி அறிவை பெற்ற தொழிற்படையும் இருக்க வேண்டும்.

தற்போது குறைந்த செயற்திறனுள்ள விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்து மதிப்பீடுகளைச் செய்வதற்கும், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க சபையொன்றையும், டிஜிட்டல் மாற்ற முகவர் நிறுவனமொன்றையும் நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இலங்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: