இலங்கையில் அணுசக்தியை நிறுவுவது பொருத்தமற்றதாம் – ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் உட்பட பல அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்!

Wednesday, April 12th, 2023

ரஷ்ய ஆதரவுடன் இலங்கையில் அணுமின் நிலையங்களை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

2010 இலும் தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு அணுமின் நிலையங்களை அமைக்கும் திட்டங்களைக் கொண்டுவருவதற்கு அப்போதைய ஜனாதிபதியால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

எனினும், இலங்கையில் அணுசக்தியை நிறுவுவது பொருத்தமற்றது என்பதை ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் உட்பட பல அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்ததாக செய்தித்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதற்காக அறிவியல், பொருளாதார மற்றும் சமூக காரணங்கள் கூறப்பட்டிருந்தன. முதலாவதாக அணுசக்தி தொழில்நுட்ப வல்லுநர்கள் அணுசக்தியை ‘பசுமை ஆற்றல்’ என்று கூறுகின்றனர்.

இது மின் உற்பத்தி காலத்தில் மட்டுமே சரியானது. ஆனால் நீண்ட காலத்துக்கு பொருத்தமானது அல்ல. அதன் முடிவில், கழிவுப் பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.

இதற்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கவனமான முகாமைத்துவம் தேவைப்படுகிறது. எனவே, அணுசக்தி என்பது ‘பசுமை ஆற்றல் அல்ல என கூறப்படுகின்றது.

ஒரு அணுமின் நிலையத்தை உருவாக்க சுமார் 5 முதல் 8 ஆண்டுகள் எடுக்கும் என்பதுடன், 2 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

2022ஆம் ஆண்டில், இலங்கையால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இந்தநிலையில் மீண்டும் அதிக கடனை பெறுவது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. எனவே பொருளாதார ரீதியில் அணுமின் நிலையங்கள் சாத்தியமானவை அல்ல.

அணுக்கழிவுச் செயலாக்கம் ஆலையின் செயற்பாட்டுக் காலத்தைக் கடந்தும் தொடர வேண்டும்.

ஆனால் இலங்கையில் இதை நிறைவேற்றுவதற்கான வசதிகளோ அல்லது அறிவோ இல்லை.

அத்துடன் தேவையான உட்கட்டமைப்பு மற்றும் மனித திறன் இலங்கையிடம் இல்லை என்ற காரணமும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆலைகளை இயக்குவதற்கு இலங்கை, ரஷ்ய கட்டடவியலாளர்களையும், நன்கு பயிற்சி பெற்ற ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்களையும் சார்ந்திருக்க வேண்டும்.

அவர்கள், சில இலங்கையர்களுக்கு குறைந்த மட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பயிற்சியளிக்கலாம். ஆனால், இது நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க உதவாது.

எனவே, இலங்கையில், அணுமின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், நடத்துவதற்கும், பராமரிப்பதற்கும் தேவையான உட்கட்டமைப்புகளோ அல்லது மனிதத் திறனோ இல்லையென்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: