இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவு – அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவிப்பு!
Wednesday, February 1st, 2023
இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.
இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார்.
இரண்டு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரோடு நேற்று இரவு 10.10 மணியளவில் புதுடில்லியில் இருந்து இலங்கை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான 75 ஆண்டு கால இராஜதந்திர உறவுவை குறிக்கும் வகையில் அவரது வருகை அமைந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் அவரது வருகை பொருளாதார செழுமையை வளர்ப்பதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் தற்போதைய சீர்திருத்தங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவை எடுத்துக்காட்டுகிறது எனவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேபாள வெளிவிவகார அமைச்சர் பிமலா ராய் பௌத்யால் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நாளையதினம் இலங்கை வருகைதரவுள்ளார்.
கொழும்பில் நடைபெறும் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் பிமலா ராய் பௌத்யால் இலங்கை வருகிறார்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் நேபாள வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.
நாளைய தினம் சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார விழாவில் அவர் பங்கேற்கிறார்.
காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நேபாள வெளிவிவகார அமைச்சர், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ளார்.
இதன் பின்னர் அவர் பெப்ரவரி 5 ஆம் திகதியன்று மீள நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


