இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் – அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு சுற்றாடல் அமைச்சுக்கு ஆலோசனை!

Saturday, May 21st, 2022

‘அல்லி மலர்’ இலங்கையின் தேசிய மலர் என்பதை தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய உரிய நிறுவனங்களைப் போன்று செய்தித்தாள் விளம்பரங்கள் ஊடாகவும் பொதுமக்களை உரிய முறையில் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோபா எனப்படும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு சுற்றாடல் அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளில் தேசிய மலர் தொடர்பில் பாடசாலை, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை விழிப்புணர்வூட்டினாலும் அது போதியளவு இடம்பெறவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் 2015 ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய தேசிய மலர் ‘அல்லி மலர்’ என அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை விழிப்புணர்வூட்டுவதற்குப் போதியளவு பிரசாரத்தை வழங்குவதற்கு அமைச்சு தவறியுள்ளதாக கோபா குழு அறிவித்துள்ளது.

இதனால் தேசிய மலர் ‘நீல அல்லி’ என இன்னும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குழு கண்டறிந்துள்ளது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த கோபா குழுவின் முதலாவது அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 08ஆம் மாதம் 04ஆம் திகதி முதல் 11ஆம் மாதம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட 7 அரச நிறுவனங்கள் மற்றும் ஒரு விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விசாரணை செய்யப்பட்ட தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: