இலங்கையின் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு – கொரிய குடியரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, September 16th, 2023

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு, கொரிய வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இலங்கையின் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை, இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கொரிய குடியரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் லீ ஜங்சிக் தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் கொரிய தூதுவர் லீ மியோன் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் இடையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது  கொரிய மொழி அறிவு கொண்ட திறமையான தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதாரம், விவசாயம், கல்வி, தகவல் தொழிநுட்பம் உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்காகவும், கொரியாவில் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்திற்கும் கிடைத்துள்ள ஆதரவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார்.

இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கொரிய மொழியைக் கற்பிப்பதற்காக கொரிய அரசாங்கத்திடம் இருந்து மேலும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார்.

இந்த முன்மொழிவுகளை தாம் சாதகமாக பரிசீலிப்பதாகத் தெரிவித்த தொழிலாளர் அமைச்சர் லீ ஜங்சிக், இலங்கைக்கான தனது விஜயத்தின் போது, ​​இலங்கையில் கொரிய மொழியைக் கற்பிக்கும் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் யோசனை இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தின் முத்துவாகக் கருதப்படும் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் என்றும், நாட்டின் விருந்தோம்பல் துறையில் கொரிய முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: