இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதை தவிருங்கள் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்புக் குழு பரிந்துரை!

Tuesday, October 24th, 2023

இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் ஒன்றுக்கூடி தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இதன்போதே இவ்வாறு குழுவின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி அமெரிக்கத் தூதுவர் வெளியிட்டிருந்த சில கருத்துகளுக்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியிருந்த நிலையில் இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்க தூதுவர் தலையிடுவதை நிறுத்த வேண்டுமென ஆளும் மற்றும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த விடயம் மற்றும் ஏனைய சில விடயங்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது எடுக்கப்பட்ட சில முடிவுகளை கடிதமொன்றின் ஊடாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அனுப்பியுள்ளார்.

“நிராயுதபாணியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிப்பதாக பல சர்ச்சைக்குரிய கருத்துகளை அமெரிக்க தூதுவர் வெளியிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துகள் வெளியிடுவதை அவர் தவிர்க்க வேண்டும். அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்“ என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் குறித்த கடிதத்தில் சரத் வீரசேகர, கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் கேபிடல் ஹில் கட்டடத்தை உடைத்து சேதம் விளைவித்த எதிர்ப்பாளர்களை அமெரிக்க இராணுவம் எவ்வாறு அடக்கியது என்பது முழு உலகத்துக்கும் தெரியும். அமெரிக்க தூதுவருக்கு சொந்த நாட்டின் அனுபவங்கள் சிறந்த உதாரணங்களாக இருக்கும் எனவும் சரத் வீரசேகர, கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வியன்னா உடன்படிக்கையின் பிரகாரம் தூதுவர் ஒருவருக்கு மற்றுமொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளதுடன், இத்தகைய தலையீடுகள் தேசிய பாதுகாப்பில் தாக்கங்களை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் இதுபோன்ற தேவையற்ற கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் சரத் வீரசேகர, வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

எந்தவொரு தடையுமின்றி பொதுச் சேவைகளை மேற்கொள்ளுங்கள் - அனைத்து அமைச்சுச் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி அ...
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை - வியாபாரிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை...
அரச நிறுவனங்களிடம் வருடாந்த அறிக்கைளை கோரும் பிரதமர் - விரைவாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் பணிப்பு...