இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு – அபிவிருத்திக்கான சவுதி நிதியம் பிரதமரிடம் உறுதி!

Thursday, December 30th, 2021

எதிர்கால முன்னுரிமை குறித்து கவனம் செலுத்துகையில் குறிப்பாக கிராமிய பிரதேசங்களின் சிறு நீர்ப்பாசனம், கிராமிய நீர் வழங்கல் மற்றும் எதிர்கால வீதி அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதிநிதிகளிடம் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷாட் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே பிரதமர் இவ்வாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.

மேலும் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கு சவுதி அராபி அரசாங்கம் மற்றும் அபிவிருத்திக்கான சவுதி நிதியம் வழங்கிவரும் நெருக்கமான ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருநாட்டு அரசாங்கங்களுக்கும் இடையே தொடர்ச்சியாக காணப்படும் ஒத்துழைப்பிற்கும், நட்பிற்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் ஆதரவுடன் இந்நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. அன்று முதல் கடந்த நான்கு தசாப்த காலங்களாக இந்நாட்டின் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்நிதியம் பங்களிப்பு செய்துள்ளது.

குளியாபிடிய வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டமும் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் கடனுதவியின் கீழ் கடந்த 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் இணைய தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டிருந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் திறந்துவைக்கப்பட்ட பிபில முதல் செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி திட்டமும் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் நிதியுதவியின் கீழ் செயற்படுத்தப்பட்ட திட்டமாகும்.

குளியாபிடிய மற்றும் செங்கலடியில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகளிலும் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வீதி அகலிப்பின் போது பாதிக்கப்படும் காணி உரிமையாளர்களது நலன்களும் பூர்த்திசெய்யப்பட வேண்டும் - ஈ.பி....
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய முகாமையாளர் கைது!
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்பகுதிகளில் கறுப்புக் கொடி போராட்டம் - யாழ்...