இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

Wednesday, January 22nd, 2020

சீனா மற்றும் அதன் பிராந்திய நாடுகளில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரமாக அதிரிகரித்துள்ள நிலையில் தற்போது அமெரிக்காவிலும் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் குறித்த வைரஸின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இலங்கை மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று இலங்கை தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோய் நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.

வைரஸின் அறிகுறிகள் தென்பட்டால் பொருத்தமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், அவர்களின் பயண விபரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்துமாறும் சுற்றுலாப் பயணிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருந்த நிலையில், தாய்லாந்து, தென் கொரியா மற்றும் ஜப்பானிலும் பரவத் தொடங்கியது. இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட சீன அதிகாரிகள், மனிதர்கள் மூலம் வைரஸ் பரவுவதை உறுதி செய்துள்ளனர்.

மருத்துவ ஊழியர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர், நான்காவது மரணம் நேற்று பதிவாகியுள்ளது.

சீன புத்தாண்டு விடுமுறை காலத்தில் சுற்றுலா பயணிகளின் இலங்கை வருகை அதிகரித்துள்ளதுடன், பல சீன நாட்டினர் தங்கள் விடுமுறை இடமாக இலங்கையை தேர்வு செய்வதால் இந்த வைரஸ் இலங்கையிலும் பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வைரஸைக் கட்டுப்படுத்த இலங்கையில் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்றுநோய் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரும் எந்தவொரு நபரும் அதிக காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் தென்பட்டால், அவரை விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் தொற்று குறித்து இலங்கை மக்கள் வீணான அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: