இலங்கைக்கு சர்வதேச விளையாட்டுக்களில் பங்குபற்ற தடை வருமா?

Thursday, August 11th, 2016

விளையாட்டுச் சட்டம் மற்றும் விளையாட்டு ஒழுங்கு விதிகளை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ள முறையில் மாற்றுவதாக ஒலிம்பிக் குழுவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாததால் இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கைக்கு விளையாட்டுத் தடை விதிக்கப்படவுள்ளது என சர்வதேச ஒலிம்பிக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஹேமசிரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெறும் வேளையில் தேசிய ஒலிம்பிக் சங்கத் தலைவர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் சர்வதேச தொடர்பு அதிகாரி ஜெரம் பொயிட் ஆசிய ஒலிம்பிக் சங்க அதிகாரி ஹயிடர் பாமர் ஆகியோருடன் பல மணி நேரங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள்.

விளையாட்டு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதாக பொறுப்பானவர்கள் கூறினாலும் அதை அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆகவே சர்வதேச ஒலிம்பிக் குழு பாரதூரமான முடிவுக்கு வருமென விளையாட்டு அமைச்சருக்குத் தெரியப்படுத்தி உள்ளார்கள் என தேசிய ஒலிம்பிக் சங்க தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ ஒலிம்பிக் கிராமத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.

பல வருடங்களாக விளையாட்டு சட்டம் ஒழுங்கு விதிகளை திருத்துவதாக எமக்கு பொய் கூறியுள்ளார்கள். பிழையை சரி செய்யும் வரை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. விளையாட்டு ஒழுங்கு விதிகளை திருத்தாவிட்டால் எமக்கு விளையாட்டுத் தடை வெகுவிரைவில் விதிக்கப்படும் விளையாட்டு அமைச்சர் அவர்களுடன் பேசியதில் எமக்கு சிறிது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பெர்னாணடோ கூறினார்.

இப்பேச்சுவார்த்தை மிகவும் சிநேகபூர்வமாக நடைபெற்றது என்றும் இது போன்ற ஒரு நிலைமை காரணமாக குவைத் நாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு இம்முறை ஒலிம்பிக் விளையாட்டில் சர்வதேச ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டிகளில் பங்கு பற்றுவதாகக் கூறினார்.

Related posts: