இலங்கைக்குவரும் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு அனுமதியை வழங்க புதிய நடைமுறையொன்றை உருவாக்க நடவடிக்கை – இந்துஸ்தான் டைம்ஸ் தகவல்!

Saturday, September 30th, 2023

எதிர்காலத்தில் இலங்கைக்குவரும் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு அனுமதியை வழங்க புதிய நடைமுறையொன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் கடல் எல்லைக்குள் அனுமதிக்கப்படும் கப்பல்களின் வகை பற்றிய வழிகாட்டுதல்கள் மற்றும் விவரங்களை உள்ளடக்கிய நடைமுறைகளை (SOP) விரைவில் கொழும்பு அறிவிக்க உள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் முயற்சியால் இந்த செயல்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் செயற்கைக் கோள்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கண்காணிக்க சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) பயன்படுத்தும் யுவான் வாங் 5 என்ற கப்பலின் வருகையால் கடந்த ஆண்டு புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையே இராஜதந்திர ரீதியிலான பல முறுகல்கள் ஏற்பட்ட பின்புலத்தில் அடுத்த மாதம் பிற்பகுதியில் யுவான் வாங் 6 என்ற கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

என்றாலும், இதற்கு இன்னமும் இலங்கை அனுமதி அளிக்கவில்லையென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது இந்திய விஜயத்தில் கூறியிருந்தார்.

இவ்வாறான பின்புலத்தில்தான் இலங்கை முயக்கிய நகர்வாக இலங்கைக்குவரும் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு அனுமதியை வழங்க புதிய நடைமுறையொன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

SOP  நடைமுறைகளின் பிரகாரம் ஒரு நாட்டின் நீரில் கப்பல்கள் எவ்வளவு காலம் இருக்க முடியும் மற்றும் அவை எந்த வகையான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதையும் தெரிவிக்கும்.

இலங்கைக் கடற்பரப்பில் இருக்கும் போது சீனக் கப்பல்கள் இந்திய பாதுகாப்பு வசதிகளை உற்று நோக்குவதற்கு தமது உபகரணங்களைப் பயன்படுத்த முடியும் என்பதே இந்தியத் தரப்பின் மிகப்பெரிய கவலையாக இருந்தது.

அமெரிக்க விஜயத்தில் நியூயோர்க்கில் இந்தோ-பசிபிக் தீவுகள் உரையாடலில் பங்கேற்ற போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க SOP பற்றி குறிப்பிட்டார்.

இலங்கை கடற்படையால் அமைக்கப்பட்ட முந்தைய நடைமுறைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட புதிய SOP குறித்து இந்திய தரப்புடன் ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன.

சமீபத்தில், நாங்கள் இந்தியாவுடன் கலந்துரையாடினோம். எதிர்காலத்தில் இலங்கைக்கு வரும் எந்தவொரு ஆய்வு அல்லது போர் கப்பல்களுக்கும் இந்தியாவுடன் கலந்துரையாடியே அனுமதிகள் அளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் கூறியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்து.

000

Related posts: