இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற இயலாவிடின் பட்டமளிப்பைப் பிற்போடுங்கள் – துணைவேந்தருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனை!

இம்முறை நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கொவிட் 19 நிலமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடத்தலாம் என வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பட்டமளிப்பு நிகழ்வை கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துமாறு கோரி, அந்நடைமுறைகளைப் பட்டியலிட்டு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –
ஒரே அமர்வில் பங்குபற்றுபவர்களின் ஆகக் கூடிய எண்ணிக்கை 150 ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் அமர்வுகள் மீள் பட்டியலிடப்பட வேண்டும். மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் உட்பட வேறு எவரும் பல்கலைக்கழக வளாகத்தினுள் அனுமதிக்கப்படக் கூடாது.
அத்துடன் முன்னைய அமர்வில் பங்கு பற்றியவர்கள் வெளியேறிச் சென்ற பின்னர் மட்டுமே அடுத்த அமர்வுக்கு உரியவர்கள் மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று மாணவர்கள் தங்களுடன் தனிப்பட்ட படப்பிடிப்பாளர்களை அழைத்து வருவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு அமர்வின் போதும், மண்டபத்தினுள் நுழையும் சகலரது பெயர், பாலினம், வயது, தேசிய அடையாள அட்டை இலக்கம், முகவரி, தொடர்பு இலக்கம் உட்பட்ட விபரங்கள் மண்டப நுழைவாயிலில் வைத்துப் பதிவு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் பதிவு செய்யப்பட்ட அந்தந்த அமர்வுக்குரிய விபரங்களை நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடம் கையளித்தல் வேண்டும்.
ஒவ்வொரு அமர்வின் போதும், மண்டபத்தினுள் நுழையும் சகலருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, காய்ச்சல் போன்ற நோய் நிலைகள் காணப்படின் அவர்கள் மண்டபத்தினுள் நுழைய முடியாதவாறு தடை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் மண்டபத்தினுள் முகக்கவசம் அணிந்து உள் நுழைவதையும், தொடந்து அணிந்திருப்பதையும் உறுதிப்படுத்துவது. இரண்டு நபர்களுக்கிடையிலான சமூக இடைவெளியாக ஒரு மீற்றர் தூரம் பேணப்படுவதை உறுதி செய்வதும் நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
அத்துடன் நிகழ்வு இடம்பெறும் சுற்றாடலில் உள்ளும், வெளியும் உணவுப் பொருள்கள், நீராகாரங்கள் எந்தவொரு வடிவத்திலும் கையாளப்படுவதற்கு அனுமதியளிக்கப்படக் கூடாது. மேலதிகமாக நிகழ்வுக்கு முறையான அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடம் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
இந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் சிக்கல்கள் காணப்படுமாயின் கொவிட் 19 பெருந்தொற்று அபாயம் இயல்பு நிலைக்கு வந்த பின்னர் புதிய நாள் ஒன்றுக்கு நிகழ்வைப் பிற்போடுவது உகந்ததாகுமென ஆலோசனை வழங்கப்படுகிறது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் உட்பட 11 பேருக்கு குறித்த கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|