இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். அதற்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது – இராணுவ தளபதி எச்சரிக்கை!

Friday, January 15th, 2021

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை உயர்மட்டத்தில் மிக நம்பிக்கையானதாக இராணுவத்தினர் முன்னெடுத்துச் செல்லும் நிலையில் அவர்கள் கட்டியெழுப்பியுள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர்.  அதற்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது என கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் இராணுவத்தினரின் பங்களிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்காக ஹோட்டல்களுக்கு அனுப்பும்போது அங்கு அதிகளவு பணம் அவர்களிடம் அறவிடப்படுவதாகவும் அத்துடன் இரண்டாம் தரப்பு நபர்கள் மோசடிகளில் ஈடுபடுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.  எனவே அதற்கு இடமளிக்கக் கூடாதென ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் பின்னரே இதுபோன்ற மோசடிகள் இடம்பெற்று வருகின்றது. அத்தகையோர் இனங்காணப்பட்டு கைது செய்யப்படுவர்” என அவர் எச்சரித்துள்ளமை குறிப்பித்தக்கது.

Related posts: