இரண்டு வாரங்களில் தீர்வு – ரயில் ஊழியர்களின் பிரச்சினை குறித்து அமைச்சர் அர்ஜுன!

Saturday, June 29th, 2019

ரயில் ஊழியர்களின் பிரச்சினையை இரண்டு வாரங்களில் தீர்ப்பதாக போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊழியர்கள் சேவைக்கு வராவிட்டால் ஓய்வூதியர்களை நியமித்து சேவையைத் தொடர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த அவர், அவ்வாறு இல்லாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவந்தேனும் ரயில் சேவைகள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களுக்கு அசெளகரியம் ஏற்படும் வகையில் ஊழியர்கள் செயற்பட்டால் அவர்களுக்கெதிராக கடும் தீர்மானம் எடுக்க நேரிடும் எனவும் அவர் நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

மேலும் ரயில்வே ஊழியர்கள் சிலரது சம்பளத்தில் குறைபாடுகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் . எனினும் சிலர் 2 அல்லது 3 இலட்சம் ரூபாய் என அதிகரித்த சம்பளம் பெற்று வருகின்றனர்.

இது குறித்து ஆராய்ந்து முறைமை ஒன்றை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காகவே நாம் கால அவகாசம் கோரியிருந்தோம்.

எமது கோரிக்கைக்கு செவிமடுக்காமல் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்களானால் அதை எம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

ரயில்வே ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கும் நிலையில், 5 இலட்சத்து 18 ஆயிரத்து 720 அரச ஊழியர்களின் சம்பளங்களிலும் முரண்பாடு ஏற்படும்.

அவ்வாறு ஏற்பட்டால் அரசாங்கம் பெரும் நெருக்கடி ஒன்றை எதிர்கொள்ள நேரிடும். எனவே அதனைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார்.

அதனூடாக ஆராயப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அதற்கான முறைமை ஒன்றை ஏற்படுத்தி முழுமையாக பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், தற்போது முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தை தொடர் போராட்டமாக முன்னெடுக்கவிருப்பதாக, தொடருந்து பணியாளர்கள் சங்கங்கள் எச்சரித்துள்ளன. ஆனாலும் தொடருந்து சேவை அத்தியாவசிய சேவையாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: