இரசாயன உரம் இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் என விவசாயத்துறை அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, November 24th, 2021

இரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று 24 ஆம் திகதிமுதல் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

இதேநேரம் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரசாயன உரம், பீடைகொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்து 2014 இல் வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

முன்னதாக பீடைகொல்லி பதிவாளரால் 2014 இல் வெளியிடப்பட்ட க்ளைபோசேட் உள்ளிட்டவற்றின் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்கும் விசேட வர்த்தமானியை இல்லாதொழித்து, கடந்த திங்கட்கிழமை விசேட வர்த்தமானி ஒன்று வெளியாக்கப்பட்டது.

எனினும் அவ்வாறு இந்தத் தடையை இல்லாதொழிக்க வெளியிடப்பட்ட வர்த்தமானி செல்லுபடியற்றது என அமைச்சர் மகிந்தானந்த நேற்று நாடாளுமன்றில் வைத்தும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் பீடைகொல்லி பதிவாளரைப் பதவி நீக்குவதாகவும் அறிவித்தார். எனினும், தற்போது தனியார்த் துறையினர் பீடைகொல்லி, இரசாயன உரம் மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: