இயேசுநாதரின் பிறப்பு முழு மனித வரலாற்றிலும் தனிச்சிறப்பு மிக்க ஓர் நிகழ்வு – பிரதமர்!
Sunday, December 25th, 2016
சமாதானத்தின் குமாரர் என்ற வகையில் கிறிஸ்தவ பக்தர்களின் கௌரவத்திற்கும், அன்புக்கும் உட்படும் இயேசுநாதரின் பிறப்பு முழு மனித வரலாற்றிலும் தனிச்சிறப்பு மிக்க ஓர் நிகழ்வு என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள நத்தார் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள நத்தார் வாழ்த்து செய்தியில்
சுவர்க்கம், பூகோளம் மற்றும் முழு இயற்கையும் இயேசு குழந்தையின் பிறப்பினால் ஒன்றிணைந்து மகிழ்ச்சியடைந்ததுடன், அவர்கள் பிறந்த மாட்டுக் கொட்டிலானது வறிய இடையர்களுக்கும், அரசர்களுக்கும் சமாதானத்தின் குளிர்ச்சியைக் கொண்டு வந்த ஒரே உறைவிடமாக மாறியது. புவியிலுள்ள அனைத்து மக்களுக்கும் சமாதானம், சமத்துவம், நல்லிணக்கம் என்பவற்றிற்கான விடுதலைப் பாதையைக் கூறுவதற்குத் தன்னை அர்ப்பணித்த சிரேஷ்ட மனிதர் ஒருவரின் வருகை அவ்வாறு தான் இடம்பெற்றது.
‘கிறிஸ்துவின் பிறப்பு மூலம் புதிதாய் மாறும் மனிதாபிமானத்திற்கு இடமளிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை இடம்பெறும் அரச நத்தார் நிகழ்வானது கிறிஸ்துவின் பிறப்பு தொடர்பாக ஆழமாக சிந்திப்பதற்கும், அதனை எமது வாழ்க்கை முன்மாதிரியாக ஆக்கிக் கொள்வதற்கும் வழிகாட்டும் என எதிர்பார்க்கிறேன்.
சமாதானம், அன்பை அடிப்படையாகக் கொண்டு இயேசுநாதர் முன்னெடுத்துச் சென்ற அகிம்சை மிக்க புரட்சி அனுபவத்தை எமது வாழ்வில் பெறவும், அவர்களது வாழ்க்கை முன்மாதிரி ஊடாக சமய, தேசிய, கலாசாரப் பல்வகைமையை மதிபீட்டுக்கு உட்படுத்தி, ஏற்றுக் கொண்டு அனைவருடனும் சகவாழ்வுடன் வாழ இந்த நத்தார் தினத்தில் உறுதிபூணுவோம்.
இலங்கைவாழ் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும், அனைத்து உலக மக்களுக்கும் அழகிய, அர்த்தம் மிக்க இனிய நத்தார் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


