இம்மாத இறுதிக்குள் 3 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு விநியோகிக்க தயார் – உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு!

Sunday, February 21st, 2021

கொவேக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள தடுப்பூசியில் 3 இலட்சம் தடுப்பூசிகளை விநியோகிக்க தயாராகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த தடுபூசிகளை இம்மாத இறுதிக்குள் விநியோகிக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தென்கிழக்காசிய வலயத்திற்கான பிரதிநிதி, விசேட வைத்திய நிபுணர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

முன்பதாக கொவேக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு 40 இலட்சம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதில் 3 இலட்சம் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள், இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொவேக்ஸ் திட்டத்தின் முதல் கட்டத்தினூடாக 16 இலட்சம் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

முதல் கட்டத்தில் வழங்கப்படவுள்ள 16 இலட்சம் தடுப்பூசிகளும் மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கு விநியோகிக்கப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை ஆறு மாதங்களுக்கு மாத்திரமே களஞ்சியப்படுத்த முடியும் என்பதால், கட்டம் கட்டமாக தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஆவணங்களை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு கடந்த 18 ஆம் திகதி அனுப்பியுள்ளதாக அரச ஔடத கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: