இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறவீட்டுச் சட்டமூலம்!

Wednesday, September 21st, 2022

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறவீட்டுச் சட்டமூலத்தில் நேற்று (20) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றத்தில் இன்று (21) அறிவித்தார்.

முன்பதாக குறித்த சட்டமூலம் கடந்த 08 ஆம் திகதி மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் கொவிட் 19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் 2022 ஆம் நிதியாண்டுக்குரிய வரவு செலவு திட்டத்தில் குறித்த சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வருடமொன்றில் 120 மில்லியன் ரூபாவிற்கு அதிகமாக இலாபம் பெறும் இறக்குமதியாளர், உற்பத்தியாளர், சேவை வழங்குநர்கள், மற்றும் மொத்த விற்பனையார் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் மொத்த விற்பனை வரவின்மீது 2.5 வீதம் வரியாக விதிக்கப்படும்.

இந்த வரியினால் எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கான வருடாந்த வருமானம் 140 பில்லியனாகும்.

இதற்கமைய 2022ஆம் ஆண்டு 25ஆம் இலக்க சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டம் இன்று (21) முதல் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: