இன்னும் 6 மாதங்களுக்கு டெங்கின் தாக்கம் நீடிக்கும்!

Thursday, March 23rd, 2017

அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு, டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்

கிண்ணியா பிரதேசத்தில் தற்போது டெங்கு 2ஆம் வகை நோய்த் தாக்கமே உள்ளதாகவும் எச்1என்1 இன்புளுவன்சா (பன்றிக் காய்ச்சல்) தொற்று அங்கு ஏற்படவில்லை என்றும், அவர் மேலும் கூறினார். மாலைதீவுகளில் தற்போது, பன்றிக் காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், அங்கிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கூடாக, இலங்கையில் அந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், எனவே, இது குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.

பன்றிக் காய்ச்சல் நோயானது, கடந்த 3 வருடங்களாகவே நாட்டில் காணப்படுவதாகவும் நுவரெலியா, கிண்ணியா, வன்னி ஆகிய மாவட்டங்களில், அவ்வப்போது இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். இதேவேளை, அடையாளங் காணாத  4,500  காசநோயாளர்கள்,  சமூகத்தில் வாழ்ந்து வருவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார். உலக காசநோய் தினம், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில் காசநோய் தொடர்பில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் 2016ஆம் ஆண்டு, 8,886 காசநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், கடந்தாண்டு, 13,757 காசநோயாளர்கள் இனங்காணப்பட்டதாகவே புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான சிகிச்சையின் மூலம் காசநோயைக் குணப்படுத்த முடியும். இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாகக் காணப்படும் இருமல், உடல் மெலிதல், இரவு வேளைகளில் ஏற்படும் காய்ச்சல், மிகையாக வியர்த்தல், பசியின்மை, கபம் போன்ற நாட்பட்ட நோய் அறிகுறிகள் காணப்படின், உடனடியாக வைத்தியரை நாடவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

Related posts: