இந்திய – சீன பூகோள அதிகார போட்டியில் இலங்கை போர்க்களமாகும் அபாயம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!

Thursday, November 23rd, 2023

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பூகோள அரசியல் அதிகார போட்டியில் இலங்கை போர்க்களமாகக்கூடிய அபாயம் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது, ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையால், இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள துறைமுகங்களுக்கு சீன உளவுக் கப்பல்கள் வருகை தந்த விவகாரம், இந்தியாவில் பாதுகாப்பு கேள்விகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் இருதரப்பு உறவுகளில், இது எந்த எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது

இதேவேளை அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், 1988ஆம் ஆண்டில், இலங்கையை பொறுத்தவரையில் இந்திய துருப்புக்களின் வருகை, ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது.

இந்தியா தமது சொந்த பாதுகாப்பைப் பற்றி கவலைப்படும் நிலையில் இலங்கைக்கு வரும் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்களில் சோதனை நடத்தப்படும் என்று தாம் இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியான மொஹமட் முய்ஸு, அங்கிருக்கும் இந்திய படையினரை மீளப் பெறுமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளமை தொடர்பில் கருத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாலைத்தீவில் உள்ள தற்போதைய அரசாங்கத்துடன் உறவுகளை கட்டியெழுப்புவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் படைகளை வெளியேற்றுவது என்பது தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாகும். இந்தியா அதைப் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. எனவே மாலைத்தீவுடனான உறவை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், மாலைத்தீவுக்கு இந்தியாவின் உதவி தேவையாகும்.

இதேவேளை இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையை விமர்சித்ததற்காக இந்திய அரசாங்கத்தை, ஜனாதிபதி சாடியுள்ளார்.

இந்தியர்களின் கருத்துக்களுடன் தமக்கு உடன்பாடு இல்லை. எங்களின் முன்னேற்றத்தை இந்தியா விமர்சித்தது தமக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.

இந்திய அரசியல் முன்னேற்றங்கள் இலங்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், எது நடந்தாலும் இந்தியாவுடனேயே இலங்கை ஒருமித்து பயணிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: