இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரக்கொட இந்திய குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்கள் கையளிப்பு!

Friday, September 24th, 2021

அமைச்சரவை அந்தஸ்த்துடன் நியமிக்கப்பட்ட இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரக்கொட, புதுடில்லியில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்துள்ளார்.

கோவிட்-19 தொற்றுநோய் சூழ்நிலையில் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப, நற்சான்றிதழைக் கையளிக்கும் வைபவம் வெளிவிவகார அமைச்சில் மெய்நிகர் ரீதியாக இடம்பெற்றது. ராஷ்ட்ரபதி பவனில் இருந்து வெளியுறவு அமைச்சுடன் இணைந்து கொண்ட இந்திய ஜனாதிபதியிடம் உயர்ஸ்தானிகர் மொரக்கொட தனது நற்சான்றிதழைக் கையளித்தார்.

நற்சான்றிதழ் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர்ஸ்தானிகர் மொரக்கொட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அதே வேளை, இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதும், அந்த உறவை ஒரு விஷேட நிலைக்கு உயர்த்துவதுமே இந்தியாவுக்கான தனது பணியின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.

பௌத்த மதம் இலங்கைக்கு இந்தியா அளித்த மிக அருமையான பரிசு எனக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், தனது கொள்கை வரைபடமான இலங்கையின் இராஜதந்திரத் தூதரகங்களுக்கான ஒருங்கிணைந்த வியூகமானது புத்தரின் போதனைகளின் அடிப்படையில் அமைத்துள்ளதாக இந்திய ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

தனது பணியின் முக்கிய நோக்கத்தை உணர்ந்து, ஜனாதிபதி மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆதரவையும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பழைமையான, நேர சோதனை மற்றும் பல பரிமாண உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும் உயர்ஸ்தானிகர் மொரக்கொட கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, உயர்ஸ்தானிகர் மொரக்கொடவின் அறிக்கைக்கு ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் நன்றிகளைத் தெரிவித்ததோடு, இந்தியாவின் ‘அயல்நாட்டிற்கு முன்னுரிமை’ மற்றும் எஸ்.ஏ.ஜீ.ஏ.ஆர். கொள்கைகளில் இலங்கை விஷேட இடத்தை வகிப்பதாகத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவான, வரலாற்று மற்றும் பல் பரிமாண உறவுகள் மற்றும் தற்போதுள்ள வலுவான இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பை அவர் நினைவு கூர்ந்தார். இரு நாடுகளுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு தொடர்ந்து விருத்தியடையும் என தனது நம்பிக்கையைத் தெரிவித்த ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

சேர் பாரொன் ஜயதிலக்க 1942 இல் இலங்கையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதிலிருந்து இந்தியாவுக்கான இலங்கையின் இருபத்தி ஆறாவது தூதுவராக மிலிந்த மொரக்கொட நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00000

Related posts: