இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Wednesday, September 9th, 2020

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வட பகுதிக்கு வருபவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று  மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளிற்கு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

கடற்கரையை  அண்டிய பகுதியில்  இலங்கை கடற்படையினரால் விசேட ரோந்து, கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் அண்மையில் தொண்டமானாறுப் பகுதியில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வந்திறங்கிய 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் இன்னும் எத்தனை பேர் இவ்வாறு சட்டவிரோதமாக வருகை தந்துள்ளார்கள் என்பது தொடர்பில் ஒரு கேள்வி உள்ளது. இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அத்துடன் இது விடயம் தொடர்பில் கடற்படையினரின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கின்றது.

அதாவது கடற்கரையை அண்டிய பகுதிகளில் உள்ள பிரதேச செயலர்கள் தமது பிரதேச மட்டத்தில் கட்டாயமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நீங்கள் தயாராக வேண்டும். தங்களது பிரதேசங்களில்  மாதத்திற்கு இரண்டு தடவைகள் அந்தப் பகுதி சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், கடற்படையினர், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அப்பகுதி பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புகளின் பங்குபற்றுதலோடு மாதத்தில் இரண்டு தடவைகள் கூட்டங்களை வைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: