இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சந்திப்பு!

Thursday, January 18th, 2024

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (16) நாடாளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் பங்கேற்றிருந்தார்.

இந்தச் சந்திப்பில் புதிய உயர்ஸ்தானிகருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த  சபாநாயகர், இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கை இக்கட்டான சூழலை எதிர்கொண்டிருந்தபோது இந்தியா வழங்கிய அனைத்துவிதமான உதவிகள் குறித்து நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதற்கு முன்னர் தான் இலங்கையில் பணியாற்றிய நினைவுகளை மீட்ட இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்பிருந்த நிலைமையில் பாரிய மாற்றங்களை அவதானிக்க முடிந்திருப்பதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் ஐக்கியத்தை மேம்படுத்த இந்தியா விரும்புவதாகவும், இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியா செயற்றிட்டத்தில் அடைந்திருக்கும் வெற்றி மற்றும் அதனால் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் நன்மைகள் குறித்து இந்திய உயர்ந்தானிகர் நீண்ட விளக்கமளித்தார். அத்துடன், இலங்கையின் எரிசக்தித்துறையின் அபிவிருத்தியில் முதலீடுகளைச் செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும், இதில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தின் விளைவாக இரு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

டிஜிட்டல் துறையில் இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சபாநாயகர் கேட்டுக்கொண்டார். தமது அண்மைய இந்திய விஜயத்தின் போது இந்தியாவின் துரித உட்கட்டமைப்பு முன்னேற்றங்களைப் பார்க்கக் கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். இலங்கை ஜனநாயக ரீதியில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்துக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட சபாநாயகர், துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரித்திருப்பதற்கு எடுத்திருக்கும் முயற்சிகள் பற்றி விளக்கமளித்தார்.

இரு நாட்டுப் நாடாளுமன்றங்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களுக்கான பரிமாற்றத் திட்டங்களை அதிகரிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் இங்கு உறுதியளித்தார்.

000

Related posts: