இக்கட்டான நேரத்தில் இந்தியா, இலங்கையுடன் நிற்க வேண்டியதன் அவசியத்திற்கு இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக ஆதரவு – இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, June 19th, 2022

இலங்கைக்கு தன்னால் முடிந்ததை செய்த நாடாக இந்தியா தனித்துவமாக விளங்குகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுடனான  கருத்துப்பகிர்வின் போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.

பல வழிகளில் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைக்கான மிகப்பெரிய சோதனை இலங்கை விவகாரம் என பிரதமர் மோடி கருதுகின்றார் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டியிருக்கும் என்பதே தான் அறிந்துகொண்டுள்ள விடயம் என குறிப்பிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை முன்னெடுக்கவேண்டிய விடயங்கள் தொடர்பாக கொள்கை பரிந்துரைகள் முன்வைக்கப்படும். அந்த பரிந்துரைகள் எந்த நாட்டிற்கும் இலகுவான விடயங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்தகாலங்களில் இந்தியா இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதை நினைவுகூர்ந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் பாக்கிஸ்தானும் இவ்வாறான நெருக்கடியில் சிக்குண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக, மீண்டும் இலங்கைக்கு உதவுவதற்கு இந்தியா ஆலோசித்து வருவதாகவும் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இது தொடர்பில் ஆராயப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

முன்பதாக இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான நிலைமையில் இந்தியாவின் வகிபாகம் தொடர்பாக இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது.

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா, இலங்கையுடன் நிற்க வேண்டியதன் அவசியத்திற்கு ஏகமனதாக ஆதரவு இருப்பதாகக் கூறிய அவர், பல்வேறு விவகாரங்கள் மற்றும் இந்தியாவின் பங்கு குறித்து கலந்துரையாடல் நல்லபடியாக நடத்தப்பட்டது என தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: