ஆஸி. பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி!

Wednesday, September 21st, 2016

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைமையகத்தில் நடைபெற்று வரும் பொதுச் சபையின் 71வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் ரேண்புல்லுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இந்த இருதரப்பு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் தன்னுடைய நன்றியினைத் தெரிவித்த அவுஸ்திரேலியப் பிரதமர், தமது அரசாங்கமானது மிகுந்த வெளிப்படையான மனிதாபிமான கொள்கைகளை கொண்டுள்ளது எனவும் உண்மையான குடியேற்றவாசிகளை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சில குற்றவாளிக் குழுக்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தநிலை அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரமல்லாது முழுப் பிராந்தியத்திற்கும் பொருந்தும் எனக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் இலங்கை தனது பூரண ஒத்துழைப்பை தமக்கு வழங்குவது தொடர்பில் தனது மகிழ்ச்சியினையும் தெரிவித்தார். இதேவேளை, இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் எம்.ஜே.அக்பரும் மைத்திரிபால சிறிசேனவை நியூயோர்க்கில் வைத்து சந்தித்தார்.

இதன்போது அண்மையில் கஷ்மீரில் இடம்பெற்ற வன்முறையினால் பலர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கை மக்களின் சார்பிலும் அனுதாபங்களைத் தெரிவித்த ஜனாதிபதி, பிராந்தியத்திலுள்ள அனைவரும் இவ்வாறான வன்முறைகளை இல்லதொழிப்பதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இவ் இருதரப்பு சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையிலான மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இரு அரசாங்கங்களும் மனிதாபிமான முறையில் இப்பிரச்சினையை பார்க்கவேண்டும் என கூறிய ஜனாதிபதி, சட்டவிரோதமாக எல்லைதாண்டும் மீனவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களை சாத்தியமான வழிகளில் விரைவாக விடுதலை செய்வதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை எல்லைதாண்டி மேற்கொள்ளப்பட்டுவரும் மீன்பிடி நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் மற்றும் கடல் வளங்களில் ஏற்படும் நீண்டகால பாதிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கமும் வடக்கின் மீனவர்களும் கவலையடைந்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஆகவே மீனவ சமூகத்தினரை உள்ளடக்கி இப் பிரச்சினைக்கான ஆரம்பத் தீர்வுகளை விரைவாக கண்டறியவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதற்கு இந்திய மத்திய அரசின் உதவியினை அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, ஐநாவின் பொதுச் செயலாளராக தனது இறுதி உரையியை நிகழ்த்திய பான் கீ மூன் இலங்கை மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் ஏற்பட்டிருக்கின்ற சாதகமான முன்னேற்றங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேபோன்று, அமெரிக்க ஜனாதிபதியாக பரக் ஒபாமா அவர்களும் தனது இறுதி உரையினை ஐநா பொதுச்சபையில் நிகழ்த்தியிருந்தார். உலகலாவிய ரீதியாக இடம்பெற்றுவரும் பயங்கரவாத நடவடிக்கைகளை வன்மையா கண்டித்த அமெரிக்க ஜனாதிபதி, இவ் அச்சுறுத்தலுக்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்பிற்கும் அழைப்பு விடுத்தார்.

1361911826Untitled-1

Related posts: