ஆறுகளைப் பாதுகாப்போம் திட்டத்தின்கீழ் அக்கராயன் ஆற்றை புனரமைக்க நிதி ஒதுக்கீடு – கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Saturday, September 18th, 2021

ஆறுகளைப் பாதுகாப்போம்‘ என்ற அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி அக்கராயன் ஆற்றைப் புனரமைப்பதற்கு இன்றையதினம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதனை  நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான 41 இலட்சத்து 13 ஆயிரத்து 105 ரூபாவை வழங்க திறைசேரி அனுமதி பெறப்பட்டிருப்பதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜெயசிங்க அறியத்தந்திருப்பதாக மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதியாண்டுக்குள் அரசாங்கத்தின் நிதிப்பிரமாணங்களுக்கு அமைவாக திட்டத்தை நிறைவேற்றுமாறும் அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அக்கராயன்குளம் வான்பாயும்போது வழிந்தோடும் நீர் பெருக்கெடுத்து ஒவ்வொரு வருடமும் பெருமளவு வயல்நிலங்கள் அழிவடைவதைத் தடுக்கும் வகையில், வழிந்தோடும் நீர் பாயும் அக்கராயன் ஆற்றைப் புனரமைப்பதற்காக இந்தத் திட்டம் தீட்டப்பட்டதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் ராஜகோபு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால், எதிர்வரும் காலங்களில் அக்கராயன்குளம் பெருக்கெடுக்கும்போது பயிர்ச்செய்கை நிலங்கள் வெள்ளப் பாதிப்புக்கு உட்படாது என்றும் தெரிவித்த அவர், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகள் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும், ஒக்டோபர் மாதத்துக்குள் திட்டத்தை நிறைவேற்றத் தீர்மானித்திருப்பதாகவும் பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் ராஜகோபு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: