ஆனையிறவில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் – டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு சாதகமான பதில்!

Friday, June 24th, 2016

இலங்கையில் தமிழர்கள் நிறைந்த வடக்கு மாகாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு, இளம் கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்..

வடக்கு மாகாணத்தில் கிரிக்கெற் விளையாட்டில் பெரும்பாலானவர்கள் திறமைகளைக் காட்டிவரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்துடன்கூடிய கிரிக்கெற் விளையாட்டு மைதானமொன்று அமைக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா? என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று (23) நாடாளுமன்றில் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு பதில் அளித்தள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது –

யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான ஆனையிறவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் விரைவில் அமைக்கப்படும். வடக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களுக்கு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

இதன்மூலம், வடக்கு மாகாணத்தில் இருந்து திறமையான கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். இந்த ஆண்டு தேசிய விளையாட்டு விழா கிளிநொச்சியில் நடைபெற உள்ளது என்று தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் சிங்களவர்கள்தான் தற்போது பெரும்பங்கு வகிக்கின்றனர். பிரபல சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், ரஸல் அர்னால்ட் ஆகியோர் மட்டுமே தமிழர்கள். எனினும், அவர்கள் இருவரும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் - தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை!
முன்பதிவு செய்யாமல் வருவதைத் தவிருங்கள் - சேவைகளை பெற்றுக்கொள்ள தரகர்களை நாடவேண்டாம் எனவும் மோட்டார்...
நாட்டிற்கு இயங்குநிலையில் உள்ள மாற்றங்களிற்கு உட்படுத்தக்கூடிய வலுவான பாதுகாப்பு கொள்கை அவசியம் - பா...