ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு!

Saturday, March 25th, 2017

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி முன்வைக்கப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விருத்தி’  (A/HRC/34/1  எனும் யோசனைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இலங்கைக்கு ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் இலங்கை அரசாங்கம் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்கம், நீதித்துறை சுயாதீனம் மற்றும் மனித உரிமைகளை விருத்தி செய்து கொள்ளும் செயன்முறை தொடர்பில் காட்டிய அவதானம் மற்றும் ஒத்துழைப்புக்களை நாம் மேன்மையாக கருதுகின்றோம்.

கடந்த அரசாங்கத்தில் இருந்த பகைமைவாதம் மற்றும் சுயாதீனமாக தனிமைப்படுதல் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, மனித உரிமைகளை உறுதி செய்து, நீதித்துறை சுதந்திரத்தை கட்டியெழுப்பி, தமக்கு எதிராக வரும் விளைவுகளை முறியடித்து, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியினை பலப்படுத்தி நாட்டுக்கு தேவையான சமாதானத்தை உருவாக்குவதற்காக வேண்டி நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் போன்ற அனைத்து தரப்பினர்களுடனும் இணைந்து செயற்படுவோம் என்பதே 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 05ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்திலான தேசிய அரசாங்கமானது இலங்கை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியாகும்.

2015ம் ஆண்டு இலங்கையினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30ஃ1 யோசனைகளின் கால எல்லையை மேலும் 02 ஆண்டுகளினால் நீடிப்பதன் மூலம் இலங்கையின் முன்னேற்ற பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சர்வதேச சமூகத்தினால் மிக முக்கியமான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுடன் கூடிய செயன்முறையொன்றை ஸ்தாபிப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதனால், இலங்கை மற்றும் இலங்கை வாழ் மக்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பது தொடர்பில் நாம் அனைத்து நாடுகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியவற்றை பலப்படுத்தல், நல்லாட்சி, நீதித்துறை சுதந்திரம் மற்றும் எமது நாட்டின் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் நிலையான சமாதானம் மற்றும் பொருளாதார சுபீட்சம் ஆகியவற்றை அடைந்து கொள்ளும் இம்முன்னேற்ற பயணத்தில், அனைத்து நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் செயன்முறைகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதுடன், 34/1 யோசனைகளுக்காக தமது அனுசரணையை வழங்கிய நாடுகள் எனும் அடிப்படையில் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மெசிடோனியா, மொன்டனிகோ, கனடா, இஸ்ரேல், அவுஸ்திரேலியா, யப்பான், நோர்வே, ஜேர்மனி, கொரியக் குடியரசு, லிஸ்டன்ஸ்டய்ன், சுலோவேக்கியா, நியுசிலாந்து, சுவிட்சர்லாந்து, எல்பேனியா, பெல்ஜியம், அயர்லாந்து, இந்தோனேஷpயா, செக் குடியரசு, ஹங்கேரி, ஐஸ்லாந்து, பிரான்ஸ், லித்துவேனியா, சுலோவேனியா, போலந்து, போர்த்துக்கல், ஐவரி கோஸ்ட், பல்கேரியா, கிரேக்கம், லத்வியா, சுவீடன், ருமேனியா, பின்லாந்து, மோல்டா, ஜோர்ஜியா, நெதர்லாந்து, ஸ்பெய்ன், சைப்பிரஸ், லக்ஸ்சம்பேர்க், ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலி, எர்ஸ்டோனியா, குரோசியா, பொஸ்னியா மற்றும் ஹர்ஸ்கோவியா ஆகிய நாடுகள் விசேடமாக குறிப்பிடத்தக்கது.

Related posts: