ஆசிரிய நியமனங்கள் வழங்கியும் கடமைகளைப் பொறுப்பேற்க பின்னடிக்கும் பட்டதாரிகள்!

Tuesday, February 12th, 2019

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சால் அண்மையில் 249 ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டபோதும் அவர்களில் 155 பேரே கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர் என்று கல்வித் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி யாழ் வேம்படி பாடசாலையில் நியமனங்கள் வழங்கப்பட்டன. கிளிநொச்சிக் கல்வி வலயத்தில் 48 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவர்களில் 32 பேரே இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

மடுக்கல்வி வலயத்தில் 45 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவர்களில் 31 பேர் மட்டுமே இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

முல்லைத்தீவுக் கல்வி வலயத்தில் 41 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டன. அவர்களில் 37 பேரே கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

மன்னார் கல்வி வலயத்தில் 29 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அவர்களில் 20 பேரே கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

துணுக்காய் கல்வி வலயத்தில் 24 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அவர்களில் 13 பேர் மட்டுமே கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர். வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 17 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் 6 பேரே கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

வவுனியா வடக்குக் கல்வி வலயத்தில் 19 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவர்களில் 12 பேரே கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர். நியமனங்கள் வழங்கப்பட்டவர்களில் பலர் தமக்கு அண்மையாக உள்ள பாடசாலைகளில் நியமனங்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தே கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை என்று கூறப்படுகின்றது.

பலருக்குச் சொந்த மாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளபோதும் அவர்கள் வீடுகளுக்கு அண்மையாகவுள்ள பாடசாலைகளில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் வேலைவாய்ப்பைக் கோரிப் போராட்டங்களை நடத்துகின்றனர். அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும்போது கடமைகளைப் பொறுப்பேற்க பின்னடிக்கின்றனர். சொந்த மாகாணத்துக்குள்ளேயே அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் நியமனங்கள் வழங்கப்படும் இடங்களில் பணியாற்ற முன்வர வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

Related posts: