ஆசிரியர் போட்டிப் பரீட்சை: பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையீடு!
Sunday, October 29th, 2017
அண்மையில் இடம்பெற்ற ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு யாப்பின் (iii) ம் அத்தியாயத்தின் அடிப்படை உரிமையின் 12வது உறுப்புரை மீறப்பட்டதாக குறிப்பிட்டு இம்முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
இதற்கான நியாயமான தீர்வாக கிழக்கு மாகாண சபையின் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் இரண்டு பாடங்களிலும் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற பட்டதாரிகளை நேர்முகப்பரீட்சைக்கு அழைத்து, அவர்கள் அனைவரையும் நியமனத்துக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட பட்டதாரிகளின் வினயமான வேண்டுகோளாகும்.
வேலையற்ற பட்டதாரிகளின் நியாயமான ஆதங்கங்கள்!இலங்கை அரசாங்கத்தினால் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உதவியாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டிருந்தன.ஆனால் அது பற்றியதாக தற்பொழுது பேசப்படவில்லை. இதனால் எதிர்பார்ப்புடன் விண்ணப்பித்த பட்டதாரிகள் இன்றும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடனும் காத்திருக்கின்றனர்.அதற்கு இடையில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் ஆசிரியர் சேவையில் பட்டதாரிகளை இணைத்து கொள்வதற்காக போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டது.
அப்பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளதுடன், பரீட்சைக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களும் கிழக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. இப்பரீட்சை பெறுபேறு பல பட்டதாரிகளை ஏமாற்றியுள்ளது. இப்பரீட்சைக்காக 6880 பேர் தோற்றியிருந்ததுடன் 2868 பேர் இரண்டு பாடங்களிலும் 40 புள்ளிகளுக்கு மேல்பெற்று சித்தியடைந்திருந்தனர்.ஆனாலும் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சியை கொடுத்திருந்த சூழ்நிலையிலும் நேர்முகத்தேர்வுக்காக எல்லோரும் அழைக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் தோன்றியது. 1441 பட்டதாரிகளையே ஆசிரிய சேவைக்குள் உள்வாங்க இருப்பதாக கூறியமையினால், அதனைவிட கூடுதலானவர்கள் சித்தியடைந்திருந்தமையின் காரணமாக இவ்வாறான சந்தேகம் பட்டதாரிகளுக்கு ஏற்பட்டிருந்தது.
சித்தியடைந்தும் மகிழ்ச்சி கொள்ள முடியாத நிலையிருந்தமையினை சமூக வலைத்தளங்களின் மூலமாக கேட்கப்பட்டிருந்த வினாக்களும், பதில்களும் இவற்றினை வெளிப்படுத்தியிருந்தது. அச்சந்தேகத்திற்கு ஏற்றால்போன்று வியாழக்கிழமை பிரயோகப்பரீட்சைக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் கிழக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இதனால் பல பட்டதாரிகள் ஏமாற்றமடைந்தவர்களானார்கள். மாவட்டக்களுக்கேற்ப, பட்டதாரிகள் பெற்ற இரு பாடங்களின் மொத்தப்புள்ளிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பாடங்களுக்கேற்ற வகையில் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக சில பாடங்களுக்கு இருபாடங்களிலும் சேர்த்து மொத்தமாக 80 புள்ளிகளைப் பெற்ற பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டிருப்பதுடன், இன்னும் சில பாடங்களுக்கு 100க்கு மேலும்,114க்கு மேலும்மென பல எண்ணிக்கைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் விண்ணப்பித்த பாடங்களுக்கேற்ப ஏனைய 100க்கு மேல் புள்ளிகளை பெற்றவர்களும் 80க்கு மேல் புள்ளிகளைப் பெற்றவர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மாவட்ட அடிப்படையில் ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதனாலும், ஒரே அளவான புள்ளிகளைப் பெற்றவர்கள் தாம் விண்ணப்பித்த பாடங்கள் ஒன்றாக இருந்தும், ஒரு மாவட்டத்தில் அதே புள்ளி பெற்றவர் பிரயோக பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டும், வேறு மாவட்டத்தில் அதே புள்ளியைப் பெற்ற மற்றைய பட்டதாரி நிராகரிக்கப்பட்டு உள்ளமையும் அவதானிக்க முடிகின்றது.
கிழக்கு மாகாண சபையினால் அண்மையிலும், ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் பொருட்டு பரீட்சை நடாத்தப்பட்டது. அப்பரீட்சையில் ஒவ்வொரு பாடத்திலும் 40க்கு மேல் புள்ளிகளைப்பெற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறு நடைபெறவில்லை. அதேபோன்று இப்பரீட்சையில் 40 வயதினை அண்மித்த பட்டதாரிகளும் தோற்றியிருந்தனர்.
அவர்களும் சிலர் குறித்த பாடங்களுக்கேற்ற புள்ளிகளைப் பெறாததினால் பிரயோகப் பரீட்சைக்கு நிராகரிக்கப்பட்டுள்ளனர்.இதனால் இவர்களுக்கான அரச தொழில்வாய்ப்பு என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. அரசாங்கத்தினால் அபிவிருத்தி உதவியாளர் பதவிக்கான வயதெல்லை 35ஆக மாத்திரமே மட்டுப்படுத்தியிருந்த நிலையில், ஆசிரியர் பரீட்சைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
இச்சந்தர்ப்பத்தின் மூலமாகவும் உள்நுழைய முடியாத நிலையினை பெற்றிருக்கின்றனர். என்பதும் வேதனையான விடயமாகவே இருக்கின்றன.இதேவேளை பல்கலைக்கழகங்களிலே ஒவ்வொரு பாடங்களையும் சிறப்பு கற்கையாக கற்று பட்டங்களைப் பெற்ற, மாணவர்களும் பரீட்சையில் சித்தியடைந்தும் பாட ரீதியான தரப்படுத்தலில் குறைவான புள்ளிகளைப் பெற்றதினால் அவர்களும் நிராகரிக்கபட்டுள்ளனர்.இவர்களிடமிருந்தும் பல்வேறான ஆதங்கங்கள் வெளிப்பட்டு நிற்கின்றன. குறிப்பாக, ஒவ்வொரு பாடங்களை சிறப்பு தேர்ச்சியாக கற்றும், அதற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை.
ஒவ்வொரு பாடங்களில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டிருக்க வேண்டும்.ஏனெனில் அப்பாடங்களுக்காக கற்பவர்களை பாடசாலையில் நியமிக்கின்ற போது, சிறப்பான கற்பித்தலை வழங்குவார்கள் என்பதும் இவர்களது கருத்தாக இருக்கின்றது.அதேவேளை பொதுப்பட்டத்தினை பெறுபவர்கள் மூன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பிக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.ஆனால் சிறப்பு கற்கையை மேற்கொள்பவர்களுக்கு ஒரு பாடத்திற்கு மாத்திரமே விண்ணப்பிக்க கூடிய சந்தர்ப்பமுள்ளது.இதனால் அவர்களை முன்னுரிமைப்படுத்தி வழங்காமை பட்டதாரிகளிடத்தில் மனக்கஸ்டத்தினையும், உளத்தாக்கத்தினையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குகின்ற போது, அவர்கள் பட்டம் பெற்று வெளியேறும் ஆண்டுகளுக்கேற்ப வழங்க வேண்டுமென்பது பட்டதாரிகளின் கருத்தாகவிருக்கின்றது.இதனால் உரிய வயதெல்லைக்குள் அரச நியமனத்தினை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும், நீண்ட காலங்களாக வேலையற்று தவிர்க்கின்ற சூழலையும் குறைக்க முடியும்.இவ்வாறான விடயங்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை. இதனால் 2012ம் ஆண்டு பட்டத்தினைப் பெற்றவர்கள் பிரயோகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்படாமலும், 2017ஆம் ஆண்டு பட்டத்தினைப்பெற்று வெளியேறியவர்கள் பிரயோகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


