ஆசிரியர் பயிற்சி கலாசாலை அனுமதிக்கான நேர்முகத் தேர்வு திகதியை பிற்போடுமாறு ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சிடம் கோரிக்கை

Sunday, April 16th, 2017

ஊவா மாகாணம், சப்ரகமுவா மாகாணம் ஆகிய மாகாணங்களில்  ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதற்கு அனுமதிக்காத நிலை காணப்படுகின்றது.

அங்குள்ள வலயக் கல்விப் பணிமனையால் ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதற்கு விடுவிக்கப்பட்ட நிலையிலும் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆசிரியர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதற்கு ஆசிரியர் பற்றாக்குறையே காரணம் எனச் சொல்லப்படுகின்றது

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்குச் செல்ல வேண்டியவர்களுள் அநேகமானோர் 6000 ரூபா சம்பளத்துடன் பணியாற்றும் ஆசிரிய உதவியாளர்களாகக் காணப்படுகின்றார்கள். இப்பயிற்சியை முடிப்பதன் மூலமே அவர்கள் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படுவார்கள். இவர்களை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு அனுமதிக்காது போகுமிடத்து அவர்களினை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவது தாமதமாகும். இதனால்  ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படையும்.

இது அநீதியான செயற்பாடாகும் எனத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் ஊவா மாகாணம், சப்ரகமுவா மாகாணம் ஆகிய இரு மாகாணங்களும் ஆசிரியர்களைப் பயிற்சிக்கு விடுவிக்காத நிலையினைக் கருத்தில் கொண்டு இவர்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான திகதியைப் பிற்போடுமாறு மத்திய கல்வியமைச்சின் செயலாளரை இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 31.03.2017 வெள்ளிக்கிழமை மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் ஆசிரியர்களை ஆசிரியர் கலாசாலைக்கு விடுவிக்கக் கோரிக்   கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய மாகாணத்தின் செயலாளர் செந்தில் சிவஞானம் கருத்துத் தெரிவிக்கையில், கலந்துரையாடலொன்றுக்கு அதிகாரிகளால்  அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 02.04.2017 மத்திய மாகாணம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு ஆசிரியர்களை விடுவித்துக் கையொப்பமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதே நடைமுறையை ஏனைய மாகாணங்களும் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஆகவே, ஊவா மாகாணம், சப்ரகமுவா மாகாணம் ஆகிய மாகாணங்களில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதற்கு அனுமதிக்காத நிலையை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பெறும் பயிற்சியின் மூலம் எதிர்காலத்தில் மாணவர்களே நன்மையடைவர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: