அஸ்வெசும நலன்புரி நன்மைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Tuesday, August 1st, 2023

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தின் கீழ் துரிதமாக நன்மைகளை செலுத்துவதற்கு ஏற்புடைய வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, நலன்புரி நன்மைகள் சபையால் அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப சுற்றில் பயனாளிகள் 17  இலட்சத்து 92 ஆயிரத்து 265 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் மேன்முறையீடு அல்லது ஆட்சேபனை கிடைக்கப் பெறாத பயனாளிகள் 15  இலட்சத்து 88 ஆயிரத்து 835 பேருக்கு கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டு, ஆனாலும் குறித்த வகைகளில் உள்ளடக்கப்படுவதற்காக மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்துள்ள பயனாளிகள் 84 ஆயிரத்து 374 பேருக்கு அவர்களுடைய மேன்முறையீடுகளை மீளாய்வு செய்து இறுதித் தீர்மானத்தை வழங்கும் வரைக்கும் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள வகையின் கீழ் நலன்புரி நன்மைகளைச் செலுத்துவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளில் 1 இலட்சத்து 19 ஆயிரத்து 56 பேருக்கு எதிராக ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் குறித்த ஆட்சேபனைகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற மீளாய்வுச் செயன்முறை நிறைவுபெறும் வரைக்கும் அவர்களுக்குரிய நன்மைகளை செலுத்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக விண்ணப்பித்து, ஆனாலும் தெரிவு செய்யப்படாத, தற்போது சமுர்த்தி நலன்புரி நன்மைகளைப் பெறுகின்ற 3  இலட்சத்து 93 ஆயிரத்து 97 பேருக்கு அஸ்வெசும வேலைத்திட்டத்தின் கீழ் ஆட்சேபனை மற்றும் மேன்முறையீட்டு செயன்முறை முழுமையாக நிறைவு பெறும் வரை சமுர்த்தி திட்டத்தின் கீழ் நலன்புரி நன்மைகளைச் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது சிறுநீரக உதவிக் கொடுப்பனவுகள் மற்றும் இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான உதவிக் கொடுப்பனவுகளைப் பெறுகின்ற பயனாளிகளுக்குப் பிரதேச செயலகத்தின் ஊடாக தொடர்ந்தும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் முதியோருக்கான உதவிக் கொடுப்பனவுகளை அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக தொடர்ந்தும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பராமரிப்பு இல்லங்கள் அல்லது வணக்கஸ்தலங்களிலுள்ள சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இயலாமையுடன் கூடிய நபர்கள் அல்லது முதியோர்கள் 11 ஆயிரத்து 660 பேருக்கு குறித்த உதவிக் கொடுப்பனவுகளைத் தொடர்ந்தும் செலுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: