“அஸ்வெசும” நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, July 13th, 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக “அஸ்வெசும” நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுடன் நடத்திய கலந்துரையாடல்களில் வறிய மக்களை அதிலிருந்து மீட்பதற்கு குறைந்தது 187 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு பரிந்துரை செய்ததாக குறிப்பிட்டார்.

எனினும், இலங்கை அரசாங்கம் அதனை 206 பில்லியன் ரூபா வரை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மையுடன் மிகவும் பொருத்தமான குழுவிற்கு இதன் கீழ் நன்மைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பயனாளர்கள் இந்த மாதத்திலேயே நன்மைகளைப் பெற்றுக்கொள்வார்கள்.

“அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்தில் சுமார் 20 இலட்சம் குடும்ப அலகுகளுக்கு நன்மைகள் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சமுர்த்திக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்ப அலகுகளில் 70 சதவீதமான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: