“அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டம் சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ சமுர்த்தி வங்கிகளையோ பாதிக்காது – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Friday, August 4th, 2023

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல என்றும் சமூக நலன்புரி நன்மைகள் தேவைப்படுபவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதை இலக்காகக் கொண்ட முறையான வேலைத்திட்டமாகும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது சமுர்த்திப் கொடுப்பனவு பெற்று வரும் 3 இலட்சத்து 93 ஆயிரத்து 094 குடும்பங்களுக்கு மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை தொடர்ந்து சமுர்த்திக் கொடுப்பனவை வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அஸ்வெசும சமூக நலன்புரித்திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளையும், ஆட்சேபனைகளையும் மீள் பரிசீலனை செய்த பின்னர் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: