அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை!

Wednesday, May 13th, 2020

கொரோனா அனர்த்தவலயமாக தொடர்ந்தும் இருக்கும் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், அரச மற்றும் தனியார் பேருந்துகளில் இன்றுமுதல் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த சேவையின்போது அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைக்கு செல்லும் ஊழியர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடுமுழுவதும் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் கடந்த 11 ஆம் திகதிமுதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு முறையான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீர, சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, அனைத்து தனியார்துறை பேருந்துகளையும் இன்றுமுதல் சேவைகளை ஆரம்பிக்குமாறு தனியார் பேருந்து சங்கங்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையானது அத்தியாவசிய விடயங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவசியமற்ற வகையில் பயணங்களை மேற்கொள்ள பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் போக்குவரத்துதுறை அமைச்சர் பொதுமக்கயுளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரச மற்றும் தனியார்துறை அதிகாரிகள் வழங்கியுள்ள பெயர் பட்டியலில் உள்ளவர்கள் மாத்திரமே தொடருந்துகளில் பயணிக்க முடியும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க குறித்த பட்டியலில் மேலும் பெயர்களை இணைக்க வேண்டுமாயின் இன்றுமாலை 6 மணிவரை அதற்கான அவகாசத்தை புகையிரத திணைக்கள வழங்கியிருந்தது என்றும் முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: