அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து, நாட்டின் அரச – தனியார் பங்குடமை நிறுவனங்கள் சிலவும் மருந்து உற்பத்தியை ஆரம்பித்துள்ளன – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Monday, June 28th, 2021

மருந்து இறக்குமதிக்காக, அரசாங்கத்தால் வருடாந்தம் பாரிய தொகை செலவிடப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, இந்தப் பாரிய செலவைக் குறைத்து, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக, தேசிய ரீதியாக மருந்துகளை உற்பத்தி செய்வதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் கூட்டுத்தாபனத்தின் உற்பத்தி அளவு, முன்னரைவிட அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இவ்வருடத்தில் மட்டும், வைத்தியசாலைகளுக்குத் தேவையான 7 புதிய மருந்து வகைகள் உள்ளிட்ட 65 மருந்து வகைகளை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 36 வகையான மருந்துகளுக்கான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே பெற்றுக்கொண்டிருப்பதன் மூலம், இறக்குமதிக்காகச் செலவிடப்பட்ட பாரிய தொகையை மீதப்படுத்த முடிந்துள்ளது.

புற்றுநோய் ஒழிப்பு மருந்துகள், அங்கவீனர்களுக்கான உபகரணங்கள் என்பவற்றுடன், சாதாரண மருந்து உற்பத்தி நிலையமாக மூன்று மருந்து உற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளை, ஹொரண – மில்லேவ பிரதேசத்தில் ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த அனைத்துத் திட்டங்களினதும் இறுதி நோக்கம், உள்நாட்டிலேயே மருந்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் அதனூடாக பெருமளவு அந்நியச் செலாவணியை நாட்டில் மீதப்படுத்துவதும் ஆகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி இதற்கு மேலதிகமாக, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து, நாட்டின் அரச – தனியார் பங்குடமை நிறுவனங்கள் சிலவும், தற்போது மருந்து உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சன நெரிசல் நிறைந்த நகரங்களை உள்ளடக்கும் வகையில், பல்நோக்கு வாகனத் தரிப்பிடங்களைக் கொண்ட ஒன்பது கட்டிடங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது கட்டத்தை நாம் அண்மையில் ஆரம்பித்து வைத்தோம். இந்த அதிவேக நெடுஞ்சாலை, 2023ஆம் ஆண்டு நிறைவில் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கு, உட்கட்டமைப்பு வசதிகளின் அவசியம் பற்றி எவரும் அறிவர். வீடமைப்பு, வீதிகள் மட்டுமன்றி, அனைத்து வகையிலும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திச் செய்வதற்கு, எமது அரசாங்கம் கடந்த காலத்தில் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறது எனவும் குறிப்பிட்டள்ளார்.

Related posts: