அரச பேருந்து சீரில்லை மக்கள் விசனம் விசனம் : தேவை என எந்தக் கோரிக்கையும் வரவஜல்லை என்கிறது கோண்டாவில் பேருந்து சாலை!

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியூடாக மல்லாகம் – ஏழாலை குரும்பசிட்டி வரை சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை சீரின்மையால் பல கிலோ மீற்றர் தூரம் கால்வலிக்க நடப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
யாழ்ப்பாண நகரில் இருந்து கே.கே.எஸ் வீதியூடாக 770 ஆம் இலக்க பேருந்து சேவையில் ஒரு பேருந்து மட்டுமே சேவையில் ஈடுபடுகிறது. தினமும் காலை 7 மணிக்கு குப்பிளானில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கியும் பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து குப்பிளான் வரையுமான ஒரு சேவையே தினமும் இடம்பெறுகிறது.
பாடசாலை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச, தனியார் நிறுவன ஊழியர்கள் பலரும் பருவகால சீட்டை பெற்றும் பணம் கொடுத்து தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்விடத்தில் உரிய அதிகாரிகள் கவனமெடுத்து ஆரம்பகாலங்களில் நடைபெற்ற சேவை போல் இரு பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கே.கே.எஸ் வீதி மல்லாகம் ஊடாக ஏழாலை குரும்பசிட்டி வரையான போக்குவரத்து ஆவன செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கோண்டாவில் பேருந்து சாலை முகாமையாளர் தெரிவிக்கையில் –
அந்த வழி இலக்கத்தில் பாடசாலை நேர ஒழுங்கை மையப்படுத்தியே பேருந்து சேவை இடம்பெற்று வருகின்றது. எனினும் அந்தப் பேருந்தில் தனியாரும் பயணிக்க முடியும் காலை 7 மணிக்கு ஒரு பேருந்தும் மதியம் பாடசாலை முடிவடையும் நேரத்தில் ஒரு பேருந்துமாக இடம்பெற்று வருகின்றன.
இதுவரை பேருந்து சேவை தேவை என பொதுமக்களால் எமக்கு எந்தக் கோரிக்கையும் தரப்படவில்லை. அவ்வாறு கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் எந்த நேரத்தில் பேருந்து சேவை தேவைப்படுகின்றது என்று நேர ஒழுங்குகளும் தரப்படும் பட்சத்தில் அதற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Related posts:
|
|