அரச உயர் பதவி முன்னுரிமையில் அஜித்த நிவாட் கப்ராலுக்கும் 5 ஆவது இடம் – மத்திய வங்கியின் ஆளுநருக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்க தீர்மானம்!

Wednesday, October 27th, 2021

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின் உயர் பதவி படிநிலைகளில் 5 ஆவது இடத்தில் பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம நீதியரசருக்கு அடுத்தபடியாக 5ஆவது நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை அமைச்சர், பீல்ட் மார்ஷல் ஆகியோருக்கு அடுத்தபடியாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவி தரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் –

1. ஜனாதிபதி

2. பிரதமர்

3. சபாநாயகர்

4. பிரதம நீதியரசர்

5.  A. எதிர்க்கட்சித் தலைவர்

B. அமைச்சரவை அமைச்சர்

C. பீல்ட் மார்ஷல்

D. மத்திய வங்கி ஆளுநர் என தரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவியானது, 20 ஆவது உயர் பதவியாக தரப்படுத்தப்பட்டிருந்தது.

அரசாங்க உயர் பதவி படிநிலையானது, சுதந்திர தினம் உள்ளிட்ட தேசிய நிகழ்வுகளில் உரிய அந்தஸ்தை வழங்கும் வகையில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

எனினும், ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைய, இத்தர நிலைகளில் இல்லாத அலுவலருக்கோ அல்லது நபருக்கோ உரிய அந்தஸ்தை வழங்க முடியும்.

அந்த வகையில், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் 5 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

இராஜாங்க அமைச்சரான அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட போது, குறித்த பதவி அமைச்சரவையின் அதிகாரங்களுக்கு நிகராக இருக்க வேண்டுமென கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமையவே மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை, இலங்கை அரசாங்கத்தின் உயர் பதவி படிநிலைகளில் 5 ஆவது இடத்தில் பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: