அரசியல் அதிகாரம் எமது கைகளில் இருந்திருந்தால் மக்கள் இன்று வீதிக்கிறங்கவேண்டிய நிலை உருவாகியிருக்காது –  தோழர் ரங்கன்!

Tuesday, November 21st, 2017

தமிழ் மக்கள் போலித் தேசியவாத பேச்சுக்களுக்கு எடுபட்டு அதற்குள் வீழ்ந்து கிடைப்பதால்தான் இன்றும் ஏதிலிகளாக எமது பிரதேசமெங்கும் வாழும் நிலை உருவாகியுள்ளது.

ஆனால் தமிழ் மக்கள் தமது அரசியல் அதிகாரங்களை எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களில் வழங்கியிருந்திருந்தால் அவர்களது வாழ்வியலை ஒளிமயமானதாக நாம் மாற்றியமைத்திருப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வேலணை அம்பிகைநகர் பொதுமண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

தீவகப் பகுதி மக்களைப் பொறுத்தளவில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் தமக்கான தேவைப்பாடுகளை உரிமையுடன் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் அதிகாரம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இதற்கு காரணம் எமது கட்சியின் ஜனநாயக நீரோட்டத்திற்கும் எமது தலைவரை நாடாளுமன்றம் அனுப்பி மக்களுக்கான பெரும் பணிகளை செய்வதற்கும் அடித்தளமிட்டுக்கொடுத்து இப்பிரதேசம் தான் என்பதை நாம் ஒருபோதும் மறந்தவர்கள் அல்லர். அதனால் இப்பகுதி மக்கள் எமது கட்சியின்பால் மற்றைய பிரதேச மக்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமான உரிமையுள்ளவர்களாக காணப்படுகின்றனர்.

நாட்டில் நடந்த யுத்தம் காரணமாக தரைவழிப்பாதை தொடர்பை யாழ்ப்பாண பிரதேசத்துடனும்  நாட்டின் ஏனைய பகுதிகளுடனும் தீவகப் பகுதிகள் இழந்திருந்த காலத்தில் இலங்கை அரசும் இப்பிரதேசத்தையும் அங்கு வாழ்ந்த மக்களையும் கைவிட்டிருந்தது.

இந்நிலையில் பட்டினியால் வாடிக்கிடந்த எமது மக்களை பாதுகாத்து வறுமையிலிருந்து மீட்டெடுத்து இப்பகுதி மக்களை ஒரு விடியலை நோக்கிய மாற்றத்திற்கு கொண்டுவந்தவர் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா தான்.

நாட்டில் தற்போது தேர்தல் காய்ச்சல் அனைத்து கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது. அதனால் பல கட்சிகள் மக்களைத்தேடி வரத்தொடங்கிவிட்டனர். ஆனால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை பொறுத்தளவில் தேர்தல் காலத்தில் மட்டும் மக்களிடம் சென்று மக்களின் வறுமையையும் உணர்வு களையும் விலைபேசி வாக்குகளை அபகரிப்பவர்கள் கிடையாது. அவ்வாறான எண்ணத்துடன் எமது அரசியலை முன்னெடுக்கவேண்டிய தேவையும் இருக்கவில்லை. காரணம் நாம் மக்களுடன் மக்களாகவே இருந்துவருகின்றோம்.

தீவக பிரதேசத்தை பொறுத்தளவில் அபிவிருத்தியானாலும் சரி தொழில்வாய்ப்பு மற்றும் இதர கட்டுமாணங்களானாலும் சரி அனைத்தையும் பெற்றுக்கொடுத்த உரிமை எமது கட்சிக்கும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்குத்தான் உரியது. இதில் எவரும் பங்குபோட முடியாது.

நீடித்த வரலாறு கொண்ட தமிழ் மக்களது அரசியல் பாதையில் தேர்தல் காலங்களில் இதர கட்சிகளால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை யாராவது மக்களுக்கு நிறைவு செய்து கொடுத்துள்ளார்களா என்றால் பதில் மௌனமாகத்தான் இருக்கும்.

ஆனால் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஒரு தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய யதார்த்தமான வாக்குறுதிகள் அனைத்தும் அடுத்த தேர்தல் வருவதற்குள் நிறைவேற்றப்பட்டதாகவே வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் தமிழ் மக்கள் தமது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையும் அதனூடாக நிரந்தரமான அரசியல் தீர்வையும் பொற்றுக்கொள்ள வேண்டுமானால் டக்ளஸ் தேவானந்தாவினது கரங்கள் பலப்படவேண்டும் என்பதே காலத்தின் தேவையாக உள்ளது.

இந்த தேவையை மக்கள் இன்று உணரத் தொடங்கியுள்ளனர். இதனால் வரவுள்ள தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை பெரு வெற்றிகொள்ளவைக்க மக்கள் ஆயத்தமாகிவிட்டனர்.

மக்கள் தமது அரசியல் அதிகாரத்தை இம்முறை எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கும் பட்சத்தில் மக்களது வாழ்வியலும் அவர்கள் வாழும் பிதேசங்களும் ஒளிமயமாகுவது உறுதி என்றார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் வேலணை பிரதேச முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.

Related posts: