அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அரச அதிகாரிகள் உரியவாறு புரிந்துக்கொள்ள வேண்டும் – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Friday, June 10th, 2022

ஆளுநர் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அரச அதிகாரிகள் உரியவாறு புரிந்துக்கொள்ள வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர, திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நாணய சபையின் முன்னாள் பிரதிநிதிகள், மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் இந்தக் குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

2019 ஆம் ஆண்டு இறுதியில் புதிய அரசாங்கத்தினால் வரி கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தியமை காரணமாக 500 பில்லியன் ரூபா அளவில் நாட்டுக்கு இல்லாமல் போனதாக கூறப்படுவது நியாயமானல்ல என முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதன்போது தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதித் தடை உள்ளிட்ட விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட நட்டம் மற்றும் கொவிட் நிலைமை என்பன அதில் தாக்கம் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி முன்னாள் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, வரிக் கொள்கை தொடர்பில் இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த விடயத்துடன் தொடர்புடைய பின்னணி பற்றிய குறிப்பும், அறிக்கையும் இருக்கவேண்டும் என்றும், அதன் முழுமையான பொறுப்பானது விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உரித்தானது என்றும் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அரசாங்கத்தின் பொறுப்பு மிக்க அதிகாரிகள் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்கள் உரியவாறு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் சரியானதாக அல்லாத சந்தர்ப்பத்தில், அது தொடர்பில் எடுத்துக்கூறவேண்டியது அதிகாரிகளின் பொறுப்பும் கடமையுமாகும்.

அவ்வாறான தீர்மானங்களின் விளைவுகளுக்கு அரசியல்வாதிகள் மாத்திரம் பொறுப்பல்ல என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: