அரசியலில் தமிழ் மக்கள் எப்போது விழிப்படைகின்றார்களோ அன்றுதான் உரிமைகளை வெற்றெடுத்த இனமாக தலைநிமிர முடியும் – சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்

Saturday, May 14th, 2016

தமிழ் மக்களது பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் எப்போது நீங்கள் கேள்வி கேட்கின்றீர்களோ அப்போதுதான் எமது இனம் உரிமைபெற்ற இனமாக நிமிர்ந்தெழுந்து வரலாறுகளை பதிவுசெய்துகொள்ள முடியும். அதற்கான களத்தை உருவாக்கிக்கொள்ள 1987 ஆம் ஆண்டிலிருந்து இணக்கமான அரசியலினூடாக எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்கள் மத்தியிலிருந்து பெரும்பணியாற்றி வருகின்றார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டில் சிறப்புரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –

2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விடுதலைக்கான கடமையை தம்மிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டதாக இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறி புலுடாவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் எந்தப் போராட்டத்தையும் அடகு வைத்துவிட்டு யாரும் இங்கு மரணித்துவிடவில்லை என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் தேசிய மாநாட்டை நடத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம் என்றவுடன் சிலர் சொன்னார்கள் தேசிய மாநாடாக இருக்கக் கூடாது அது தேசிய எழுச்சி மாநாடாகத்தான் இருக்க வேண்டும் என்று. அதனை மெய்ப்பிப்பது போல் நீங்கள் இங்கு அணிதிரண்டு வந்துள்ளீர்கள். அதற்காக உங்களது உணர்வுகளுக்கு நாங்கள் எங்களது கட்சியின் சார்பில் பாராட்டுகின்றோம்.

கொதிக்கும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில்; எங்கள் தலைவனுக்காக இந்த மாநாட்டு மண்டபத்தை நோக்கி உங்கள் பாதங்கள் நடந்து வரவேண்டும் என்பதற்காக வானம் இன்று நீர்சொரிந்து பூமியைக் கழுவியிருக்கின்றது.

நாங்கள் ஒரு மண்டபத்தில் நின்று மாநாடு நடத்துபவர்கள் அல்லர். மைதானத்தில் நின்று மாநாடு நடத்த வேண்டியவர்கள். ஆனால் எங்களது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு கோடு போட்டால் அந்த இடத்தில் ரோட்டையே போடுவதற்கு ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.  இந்தக் காலநிலை, காலச்சூழலிற்குள் எமது மக்களை அழைத்து உங்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் வரையறுத்து இந்த மண்டபத்திற்குள் கட்சியின் மாநாட்டை நடத்த முடிவு செய்திருந்தோம்.

ஆனாலும், 1974ஆம் ஆண்டு இந்த இடத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடந்த போது இந்த மண்டபத்தில் கூட்டம் வழிந்துநிறைந்ததால் இந்த மண்டபத்தில் அந்த மாநாட்டை நடத்த முடியாமல் மைதானத்திற்குச் சென்று நடத்தியது போன்றதொரு நிலைமை இன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டிற்கும் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு காரணமானவர்கள் எங்களுடைய தேர் சக்கரங்களாக இருக்கின்ற எமது தோழர்கள், ஆதரவாளர்கள், எங்களுடைய மக்கள் என்பதை நீங்கள் நிச்சயமாக உணருவீர்கள் என்று நம்புகின்றேன்.

நாங்கள் வெறுமனே கட்சி உறுப்பினர்கள் மட்டும் கூடிப்பேசி கலைந்துவிடுவதாக மட்டுமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக தான் இந்த மாநாடு நடத்தப்படுகின்றது. இந்த மாநாடு ஒரு அர்த்தபூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக இந்த மாநாட்டை நடத்துவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வந்திருந்தோம். அது தற்போது நிறைவேறியுள்ளது.

நாங்கள் ஒரு கொள்கைவழி நின்று உழைப்பவர்கள். இந்த மண்ணில் தமிழ்த் தேசியம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையாக தமிழ்த் தேசியத்திற்காகத் தமிழ் என்று உச்சரிக்காமல் உழைத்துக்கொண்டிருப்பவர்கள் இந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்தத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்துவதற்காக நாங்கள் இந்த மண்ணிலே இரத்தம் சிந்திப் போராடியவர்கள். எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு சுதந்திரப் போராட்ட இயக்கத்தையே வழிநடத்திச் சென்றவர். ஈ.பி.ஆர்.எல்.எவ்; இயக்கம், அதற்கு முன்னர் ஈரோஸ், அதற்கு முன்னர் ஈழ விடுதலை இயக்கம், அதற்கு முன்னர் 70ஆம் ஆண்டுகளின் ஆரம்பப்பகுதியில் மாணவர் அமைப்புக்கள் அந்த மாணவர் அமைப்புகளில் தொடங்கி இன்று வரை இந்த ஜனநாயகப் போராட்டம் வரை உங்கள் முன் வெள்ளை வேட்டியோடும் வெள்ளை ஆடையோடும் உங்களுடைய விடுதலைக்காக, எமது மக்களுடைய விடுதலைக்காக பலமாக உழைத்துவருபவர் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தத் தலைவரின் வழிநின்று இரத்தம் சிந்தி இந்த மண்ணில் போராடிய பொழுது வியர்வைகூடச் சிந்தாதவர்கள் கட்டிய வேட்டியின் மடிப்புக்கூடக் கலையாதவர்கள், சரி இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த பொழுது இந்தப் போராட்டத்திற்கு ஓரத்தில் நின்று கைகளைத்தட்டி ஒரு ஆதரவுகூடத் தெரிவிக்காதவர்கள்தான் இன்று தமிழ்த் தேசியம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதையிட்டு தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தனிநாடு கேட்டார்கள், தனிநாடு கேட்டு உங்களுடைய இளைஞர், யுவதிகள் எங்களுடைய அன்றைய சந்ததிகளையெல்லாம் வீதிக்கு அழைத்துவிட்டு, இவர்களெல்லாம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று, தத்தமது குடும்பங்களுக்கு தனிவீடு கேட்டு அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இந்தப் போராட்டத்தை இந்த மண்ணிலே நடத்திக் கொண்டிருந்தவர்கள் யார் என்று கேட்டால், இந்த விடுதலை இயக்கங்கள். அந்த விடுதலை இயக்கங்களில் முதன்மையானவைகளில் ஒன்றாக இருந்த இயக்கத்தின் பிரதம தளபதியாக இருந்து, அந்த இயக்கத்தின் அரசியல்பீட உறுப்பினராக இருந்து, ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்து உழைத்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று, இந்த மாநாட்டின் ஊடாக, உங்களுக்கு இந்த அரசியல் திட்ட பிரகடனங்கள் ஊடாக உறுதியான வார்த்தைகளைச் சொல்லியிருக்கின்றார்.

நாங்கள் எந்தத் தமிழ்த் தேசியத்திற்காகப் போராடினோமோ, எந்தத் தாயக விடுதலைக்காகப் போராடினோமோ, எந்த இனத்தின் சுயநிர்ணய உரிமைகளுக்காக இந்தத் தலைவனின் வழியில் போராடினோமோ அந்தத் தாயக விடுதலைக்காக, அந்த சுயநிர்ணய உரிமைகளுக்காக, அந்தத் தன்னாட்சி உரிமைக்காக இன்று நாங்கள் சாத்தியமான வழியில் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற இன்றைய யதார்த்தத்திற்கு ஏற்றவாறு குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பொழுது நாங்கள் இந்த மண்ணில் இருந்திருக்கவில்லை. ஆனால், அதை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்றவர்கள். அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சரியாக நடைமுறைப்படுத்தவுமில்லை. அதை நிராகரித்தவர்கள் இன்றுவரை எமது மக்களுக்காக அந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு நிகரான அல்லது அதற்கு மாற்றாக எந்தவொரு தீர்வையும் எடுத்துக் கொடுக்கவில்லை.

அந்தத் தீர்வு அன்றைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், அந்தத் தீர்வை ஏற்று அன்று சரியாக நடைமுறைப்படுத்தியிருந்தால், நாங்கள் இந்த இடத்தில் ஒரு அரசியல் தீர்வுக்காக ஒரு தேசிய மாநாடு நடத்திக்கொண்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. தேசிய மாநாட்டிலிருந்து நாம் அடுத்த கட்ட நகர்வுக்கான மாநாட்டை இந்த மண்ணில் நடத்திக்கொண்டிருப்போம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஒரு ஆரம்பப் படியாக ஏற்றுத்தான் எங்களுடைய அரசியல் பயணத்தைத் தொடங்க வேண்டுமென நாங்கள் கூறியிருந்தோம். அதை அரைகுறைத் தீர்வு, உளுத்துப்போன தீர்வு, ஒன்றுக்கும் உதவாத தீர்வு என்று கூறியவர்கள் இன்று என்ன சொல்கிறார்கள்.

வடக்குக் கிழக்கு இணைந்த அந்த மாகாண சபையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதைக் காலம் தாழ்த்தி, இழுத்தடித்து, தென்னிலங்கை அரசுகள் அதை இரண்டு துண்டுகளாக பிரித்து, அதன் அதிகாரங்களையெல்லாம் வெட்டிக் குறைத்ததன் பின்னர் துண்டு மாநிலத்திற்காக இங்கே வந்து தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

நாங்கள் வடக்குக் கிழக்கு இணைந்திருந்தபோதே இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியவர்கள்.வடக்குக் கிழக்கு இணைந்த இந்த மாநில மாகாணங்கள் தமிழர்களுடைய பிரதேசமாக, வரலாற்று வாழ்விடங்களாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் இன்று எங்களுடைய அரசியல் திட்டப் பிரேரணையில் கூறியிருக்கின்றோம்.

இந்த மாகாண சபை என்பது நாம் போராடிப் பெற்ற உரிமை. யாரிடமும் யாசகம் கேட்டுப் பெற்ற உரிமையல்ல. உங்களுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தா உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈரோஸ் என்ற அமைப்புக்கள் தமிழீழ இராணுவம் உட்பட அனைத்து இயக்கங்களும் போராடிப் பெற்ற உரிமைதான் இந்த மாகாண சபையும், 13ஆவது திருத்தச் சட்டமும்.

ஆனால் இந்தப் போராட்டத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட எங்களுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தா வரையும் பயங்கரவாதிகள் என்று கூறி, அவர்களைச் சிறையில் அடைக்க முயற்சித்த கொழும்பு சீமான்கள், நீதவான்களை அழைத்துவந்து தமிழ் மக்கள் போராடிப் பெற்ற இந்த நாற்காலியின் மீது உட்கார வைத்திருக்கிறார்கள் என்றால், இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.

இந்த மாகாண சபைக்கு வருகின்ற நிதிகள் வருடந்தோறும் திரும்பிப் போகின்றன. எங்களுடைய மக்களுக்காக, உங்களுடைய பிரதேசங்களுக்காகச் செலவு செய்வதற்குரிய அந்த நிதி வருடந்தோறும் திரும்பிப் போய்க்கொண்டிருக்கின்றது. ஏனென்றால், எமது மக்களுடைய துயரங்களை வாழ்வியல் துன்பங்களைத் துடைப்பதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை.

தமிழ் மக்களது பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் எப்போது நீங்கள் கேள்வி கேட்கின்றீர்களோ, அப்போதுதான் நீங்கள் உரிமைபெற்ற இனமாக நிமிர்ந்தெழ முடியும். 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அந்த விடுதலைக்கான கடமையை தம்மிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டதாக இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலுடாவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். உண்மை அதுவல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் எந்தப் போராட்டத்தையும் அடகு வைத்துவிட்டு யாரும் இங்கு மரணித்துவிடவில்லை.

புலிகளுக்கென ஒரு லட்சியம் இருந்தது. பாதையிருந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னரான காலப்பகுதியில் புலிகள் முன்னெடுத்திருந்த பாதையை நாங்கள் முழுமையாக நிராகரித்திருந்தோம். அந்தப் பாதையின் மூலம் எங்களுடைய விடுதலையை அடைய முடியாது. ஜனநாயக வழிமுறையில் எங்களுக்கு இருக்கின்ற அரசியல் பலத்தை வைத்துக் கொண்டு ஒரு அரசியல் தீர்வை எடுத்துக்கொண்டு முன்னோக்கிய பாதையில் நகர்வதின் மூலம்தான் எங்களுடைய மக்களைப் பாதுகாக்க முடியும். எங்களுடைய மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நாங்கள் ஒரு கொள்கைத் திட்டத்தை வகுத்திருந்தோம்.

ஆனால் புலிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலம்தான் இந்த மக்களுடைய விடுதலையை வென்றெடுப்போம் என்று ஆயுதப் போராட்ட வழியில் உறுதியைக் கொண்டிருந்தார்கள்.புலிகளின் உறுதிப்பாடு எங்களுடைய பார்வைக்குத் தவறாகவும், எமது உறுதிப்பாடு புலிகளுடைய பார்வைக்குத் தவறாகவும் காணப்பட்டாலும், இவை இரண்டும் ஒரே நோக்கத்திற்கானவையே.

ஆனால், இடையிலிருக்கும் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் எந்த நோக்கம், எந்தக் கொள்கை இருக்கின்றது. அப்படி அவர்களுக்கு இருந்திருந்தால், சந்திரிக்கா அரசு முன்வைத்த, நாங்கள் அரசியல் பலத்தோடு இருந்து இந்த மண்ணிலே, இந்த மக்களுக்காக இனிஎந்தக்காலத்திலும் எந்த அரசாலும் உருவாக்கப்பட முடியாத பிராந்தியங்களின் சுயாட்சி, காணி அதிகாரம், கல்வி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், நீதி அதிகாரம், நிதி அதிகாரம் மற்றும் வடக்குக் கிழக்கு இணைப்பு என அத்தனை அதிகாரங்களையும் கொண்ட முழுமையானதொரு பிராந்தியங்களின் சுயாட்சி என்ற அரசியல் தீர்வை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 09 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த போது அரசுக்கு அழுத்தம் கொடுத்து உருவாக்கியிருந்தோம்.

அந்தத் தீர்வு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? இல்லை, அன்றைய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிப் பிரச்சினையால் நாடாளுமன்றத்தில் வைத்து எதிர்க்கட்சியால் எரிக்கப்பட்டது. அந்த நாடாளுமன்றத்தில் நகல்கள் எரிக்கப்பட்ட போது இன்று தமிழ்த் தசியக் கூட்டமைப்பினராக உருமாறி வந்திருப்பவர்கள் அன்று நாடாளுமன்றத்தில் வைத்து இந்த அளப்பரிய தீர்வை எரித்தார்கள் என்று சொன்னால், தமிழ் மக்களின் நண்பர்களா அல்லது தமிழ்த் தேசியத்தின் பாதுகாவலர்களா இல்லை, தமிழ்த் தேசியத்தைச் சொல்லிச் சொல்லி எமது மக்களைத் துயரத்தில் ஆழ்த்தி தமிழ்த் தேசியம் என்ற கோஷத்தைத் தங்களது தேர்தல் வெற்றிக்காகப் பாவிப்பவர்கள் மட்டும் தான் என்பதை எமது மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாம் இன்று வரலாற்று ரீதியாக நோக்கும் பொழுது சக தமிழ்க் கட்சிகள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருவெடுத்துள்ள தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி அதன் பின்னரான அவர்களது வழித்தோன்றிய எவருமே தமிழ் மக்களுக்குக் கிடைத்த எந்தவொரு தீர்வையும், எந்தவொரு வாய்பபையும் பயன்படுத்தியிருக்கவில்லை.

ஆகவே, தமிழ் மக்கள் மக்களின் அரசியல் உரிமைக்காக நாங்கள் மட்டும்தான் போராட வேண்டும், வாதாட வேண்டும், முயற்சிகளை எடுக்க வேண்டும் என்ற வரலாற்றுக் கடமை என்பது எங்களுடைய தலைமையின் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்துதான் இன்று எமது கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டை நடத்திக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.

Related posts: