அரசாங்க ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வீட்டுத்திட்டம் – பிரதமர் மஹிந்தராஜபக்ச நடவடிக்கை!

Saturday, August 29th, 2020

அரசாங்க ஊழியர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுவோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டுத்திட்டங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வீடமைப்பு அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலே இந்தத் திட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின்போது, நகர்ப்புறங்களில் மக்கள் குடியிருப்பிற்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள் யாருடைய தலையீட்டிற்கும் உட்பட்டு வணிக நிலையங்களுக்கு ஒதுக்கிக் கொள்ளாது இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளும்படி இதன்போது பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் குறைந்த வருமானம் பெறுவோர், வருமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அதிக வருமானம் ஈட்டுவோர் மற்றும் அரச ஊழியர்களை இலக்காக கொண்டு, எதிர்காலத்தில் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் வீடமைப்புத்திட்டங்களை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிசை வீடுகளில் வசிப்போருக்கு இலவசமாக வழங்குவதற்காக ஆயிரத்து 400 மாடி வீட்டு குடியிருப்புகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குடிசை வீடுகள் காணப்பட்ட இடத்தில் புதிய வீடமைப்பு திட்டங்களை செயற்படுத்துவதாக பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, 608 நடுத்தர வர்க்க வீடுகள் அரச ஊழியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் 800 வீடுகளின் நிர்மாணப்பணிகள் 2021 ஆண்டில் நிறைவடையும் வகையில் அரச ஊழியர்களுக்காக காத்துள்ளது.

இந்த வீடமைப்பு திட்டங்களுக்கு மேலதிகமாக எந்தவொரு நபரும் விண்ணப்பித்து கொள்வனவு செய்யக்கூடிய வகையில் 3 ஆயிரத்து 300 வீடுகள் 10 திட்டங்களின் கீழ் எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படுமென பிரசாத் ரணவீர மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை 8 ஆயிரத்து 701 வீடுகளை நிர்மாணித்தள்ளதுடன், எதிர்வரும் ஆண்டில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் 6 பில்லியன் ரூபாய் வருவாய் எதிர்பார்ப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரேணுக பெரேரா தெரிவித்தார்.

இதனிடையே ‘செவண’ வீடமைப்பு நிதியம் கடந்த அரசால் முறைகேடு செய்யப்பட்டதால் அந்த நிதி வீடமைப்பிற்கு புறம்பாக வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் ரேணுக பெரேரா தெரிவித்திஜருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: